EN
Local

ஜேர்மனியில் நடைபெறும் சர்வதேச இளைஞர் முகாமிற்கு யாழ் மாணவன் தெரிவு

யாழ்ப்பாணம், ஜூன் 17

இலங்கை – ஜேர்மனி நட்புறவு திட்டத்தின் அடிப்படையில் ஜேர்மனியில் நடைபெறவுள்ள ‘பாடசாலைகள் எதிர்காலத்திற்கான பங்காளிகள்’ (PASCH – Schools: Partners for the Future) சர்வதேச இளைஞர் முகாமில் பங்கேற்பதற்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு மாணவர்களில் ஒருவராக யாழ்ப்பாணம் St. Patrick’s College Jaffna மாணவன் துகிஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Goethe-Institut நிறுவனத்தின் ஏற்பாட்டில், ஜேர்மனியின் St. Peter-Ording பகுதியில் நடைபெறவுள்ள இச் சர்வதேச இளைஞர் முகாமில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 900 மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இம்மாதம் 7 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடைபெறும் இம்முகாமில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் இடம்பெறவுள்ளன.

அதன்படி, தலைமைத்துவப் பயிற்சிகள், கல்வி மற்றும் கலாசார பயிலரங்குகள், விளையாட்டு நிகழ்வுகள், திரைப்படக் காட்சிகள், உலகின் பல்வேறு நாடுகளின் பாரம்பரிய உணவு வகைகளை தயாரித்தல் மற்றும் பரிமாறுதல், தத்தமது நாடுகளின் கலாசாரம், மரபுகள் மற்றும் பாரம்பரியங்களை மற்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்த சர்வதேச முகாமில் பங்கேற்பதன் மூலம் மாணவர்கள் உலகளாவிய நட்புறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும், பல்வேறு நாடுகளின் கலாசாரங்களை அறிந்துகொள்ளவும், தலைமைத்துவ மற்றும் தொடர்பாடல் திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் துகிஷ் இத்தகைய உயர்மட்ட சர்வதேச நிகழ்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த தெரிவு செய்யப்பட்டுள்ளமை வடக்கு மாகாணத்திற்கும், அவரது பாடசாலைக்கும் பெருமை சேர்க்கும் விடயமாகக் கருதப்படுகிறது.

Related Articles

Back to top button