ஜூன் 09 முதல் 12 வரை பாராளுமன்றம் கூடுகிறது

ஜூன் 09 முதல் 12 வரை பாராளுமன்றம் கூடுகிறது
04 ஜூன் 2026
பாராளுமன்றம் எதிர்வரும் ஜூன் 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் (01) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பாராளுமன்றம் கூடும் அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற அலுவல்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளும், 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான கேள்விகளும் எடுத்துக்கொள்ளப்படும்.
மேலும், ஜூன் 10ஆம் திகதி புதன்கிழமை மட்டும் காலை 10.00 மணி முதல் 10.30 மணி வரை பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கும், 10.30 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜூன் 09 – செவ்வாய்க்கிழமை
காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை:
- முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளை
- துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை
- உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளை
- பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழான கட்டளை
- நிலையியற் கட்டளை 119 இன் கீழான தீர்மானம்
ஆகியவை விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன.
அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளது.
ஜூன் 10 – புதன்கிழமை
காலை 11.30 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை:
- தொலைத்தொடர்பு அறவீடு (திருத்தம்) சட்டமூலம்
- நிதி (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு
- அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம்
ஆகியவை விவாதிக்கப்படவுள்ளன.
பிற்பகல் 5.00 மணி முதல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரப் பிரேரணை தொடர்பான விவாதம் நடைபெறும்.
ஜூன் 11 – வியாழக்கிழமை
காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை:
- மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு
- குற்றவியல் கருமங்களில் பரஸ்பரம் உதவியளித்தல் சட்டத்தின் கீழான கட்டளை
ஆகியவை அங்கீகரிக்கப்படவுள்ளன.
அதனைத் தொடர்ந்து பிற்பகல் 1.30 மணி முதல் 5.30 மணி வரை நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.
ஜூன் 12 – வெள்ளிக்கிழமை
காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை:
- இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள்
- குறைநிரப்பு மதிப்பீடு
ஆகியவை விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன.
அதன்பின் பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை, 2025ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார மீளாய்வு அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இரண்டாவது நாளாகத் தொடரவுள்ளது.
மேலும், தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த அவர்களின் வேண்டுகோளின் பேரில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடத்தப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் தற்போதைய நாணயக் கொள்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.




