சட்டவிரோத இறக்குமதி பொருட்களுடன் கொள்கலன் லொறி கைப்பற்றல்; சந்தேகநபர் கைது
குளியாப்பிட்டி, ஜூன் 15

வெளிநாட்டிலிருந்து சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெருமளவிலான பொருட்களுடன் கூடிய கொள்கலன் பாரவூர்தி ஒன்றை குளியாப்பிட்டிய வலய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியதுடன், ஒருவரை கைது செய்துள்ளனர்.
நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரம்பாவ பகுதியில் நேற்று (14) நண்பகல் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர் ஹொரம்பாவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் மேலதிக விசாரணைகளுக்காக குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட கொள்கலன் பாரவூர்தியிலிருந்து 190 வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள், மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள், 42 மோட்டார் சைக்கிள் சேஸிகள், 44 மோட்டார் சைக்கிள் இயந்திரங்கள், மிதிவண்டிகள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்கள், 6 போர்க்லிப்ட் இயந்திரங்கள், 3 எக்ஸ்கவேட்டர் இயந்திரங்கள், விவசாய உபகரணங்கள் மற்றும் பெருமளவிலான வீட்டு உபயோகப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கொள்கலனை முழுமையாக பரிசோதனை செய்வதற்காக குருணாகல் மற்றும் புத்தளம் விசேட அதிரடிப்படை (STF) முகாம்களைச் சேர்ந்த அதிகாரிகளும் உதவிக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
சுங்கவரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத இறக்குமதி தொடர்பான இந்த சம்பவம் குறித்து குளியாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த கடத்தல் நடவடிக்கையுடன் தொடர்புடைய வேறு நபர்கள் உள்ளனரா என்பது குறித்தும் விசாரணைகள் தொடர்கின்றன.




