EN
Local

இலங்கை கிரிக்கெட் மாற்றக் குழுத் தலைவர் எரான் விக்கிரமரத்னே மத அடிப்படையிலான குற்றச்சாட்டுகளை நிராகரிப்பு

Eran Wickremaratne தலைமையிலான இலங்கை கிரிக்கெட் மாற்றக் குழுவைச் சுற்றி எழுந்த மத அடிப்படையிலான குற்றச்சாட்டுகளை அவர் கடுமையாக நிராகரித்துள்ளார்.

தான் ஒரு கிறிஸ்தவ மத போதகராக அறியப்பட்டாலும், தனது மத நம்பிக்கைகள் ஒருபோதும் பிறருக்கு தடையாக இருந்ததில்லை என்றும், கிரிக்கெட் நிர்வாகத்தில் நியாயத்தன்மைக்கு அது இடையூறாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இந்த கருத்துகளை வெளியிட்டார்.

அப்போது அவர் கூறுகையில்,

“நான் ஒரு நல்ல பாடசாலையில் கல்வி கற்றேன். எந்தப் பாடசாலை என்று சொல்ல விரும்பவில்லை. எனது வகுப்பில் 35 மாணவர்கள் இருந்தனர். அதில் நான் மட்டுமே புத்தமதத்தவர் அல்லாத மாணவன். ஆனால் நான் அந்தப் பாடசாலையின் மாணவர் தலைவரானேன். எந்தப் பிரச்சினையும் இல்லை.

நான் ஒரு வங்கியை ஆரம்பித்தேன், பிரச்சினை இல்லை. தேசிய அபிவிருத்தி வங்கியின் தலைவராக இருந்தேன், பிரச்சினை இல்லை. அரச நிறுவனங்களுக்கான இராஜாங்க அமைச்சராக இருந்தேன், பிரச்சினை இல்லை. நிதி அமைச்சின் பிரதித் அமைச்சராக இருந்தேன், பிரச்சினை இல்லை,” என்று அவர் தெரிவித்தார்.

Royal College Colombo பழைய மாணவரான எரான் விக்கிரமரத்னே, 1970களின் நடுப்பகுதியில் அந்தக் கல்லூரியின் கிரிக்கெட் அணிக்காக தொடக்கத் துடுப்பாட்ட வீரராகவும் விளையாடியிருந்தார்.

“இந்த விஷயங்களைப் பற்றி பேசுவதற்கு எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் நீங்கள் இந்தக் கேள்வியை கேட்டதால் இதைப் பற்றி திறந்த மனதுடன் பேசுகிறேன். இந்தக் கேள்வியை கேட்டதற்கு நன்றி,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், நாட்டின் பல பொதுத்துறைகளில் இருப்பது போல மத, இன, சாதி அல்லது சமூக வேறுபாடுகளுக்கு இடமில்லாத நிர்வாக முறையையே தாம் பின்பற்றப்போவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்படும் போது மதம், இனம், வர்க்கம் அல்லது சமூக அடிப்படைகள் அல்லாது திறமை மற்றும் செயல்திறன் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட்டில் ஒற்றுமை, நியாயம் மற்றும் திறமையை அடிப்படையாகக் கொண்ட நிர்வாகத்தை உருவாக்குவதே தமது நோக்கம் என்றும் எரான் விக்கிரமரத்னே மேலும் கூறினார்.

Related Articles

Back to top button