வெள்ளவத்தை கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: பதற்றமான சூழ்நிலை

கொழும்பு வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு திங்கட்கிழமை (18) மாலை சுமார் 5 மணியளவில் நடைபெற்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் மற்றும் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்வு நடைபெற்ற இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பெருமளவிலான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதற்கிடையில், சில சிங்கள அமைப்புகளைச் சேர்ந்த நபர்கள் அங்கு திரண்டதுடன், நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றவர்களை நோக்கி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றமான மற்றும் குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டது.
மேலும், நினைவேந்தல் நடைபெற்ற இடத்திற்குள் நுழைய முயன்ற சிலரை பொலிஸார் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட பரபரப்பினால் வெள்ளவத்தை கடற்கரை வீதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





