EN
Local

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாடு

யாழ்ப்பாணம் | ஜூன் 10, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையின் ஏற்பாட்டில் முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாடு எதிர்வரும் ஜூன் 12ஆம் திகதி நடைபெறவுள்ளதாக இசைத்துறையின் தலைவர் கலாநிதி சூரியகுமார் தெரிவித்துள்ளார்.

இன்று (10) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை 60 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை கொண்டுள்ளதாகவும், இத்துறையில் கல்வி கற்ற முன்னாள் மாணவர்கள் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.

இசைத்துறையின் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக அமையவுள்ள இந்த முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாடு, தமிழிசை தொடர்பான ஆய்வுகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாநாட்டின் நிகழ்வுகள் ஜூன் 12ஆம் திகதி காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் ஆரம்பமாகவுள்ளன. தொடர்ந்து ஜூன் 13ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின் ஏற்பாட்டில் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

இந்த மாநாடு கந்தையா கார்த்திகேசு நிதியத்தின் நிதிப் பங்களிப்புடன் நடைபெறுவதுடன், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊழியர்கள் மற்றும் வெளிப்புற கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரின் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளதாக கலாநிதி சூரியகுமார் தெரிவித்தார்.

தமிழிசை மற்றும் கலை ஆய்வுகளில் ஆர்வமுள்ளவர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த மாநாட்டில் பங்கேற்று பயன்பெறுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Related Articles

Back to top button