EN
Local

பருத்தித்துறை கடலில் காணாமல் போன 4 மீனவர்களைத் தேடும் நடவடிக்கை: இந்தியாவின் உதவியுடன் தீவிர தேடுதல்

பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன நான்கு மீனவர்களை மீட்பதற்காக இந்தியாவின் உதவியுடன், சர்வதேச கடல் எல்லை பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், இந்தச் சம்பவம் மிகவும் வேதனையானது என்றும், தங்கள் உறவுகளை இழந்துபோய்த் தேடும் குடும்பங்களுக்கு ஆறுதலையும் தெரிவிப்பதாகவும் கூறினார்.

இலங்கை கடற்படையின் உதவியுடன், ராடார் கருவிகள் பயன்படுத்தி இலங்கையின் கடல் எல்லைப் பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

எனினும், இதுவரை குறித்த மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் கண்டறியப்படாததால், இந்திய உயர்ஸ்தானிகரகம் ஊடாக இந்திய கடல் எல்லைப் பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி மற்றும் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சு மட்டத்தில் ஏற்கனவே சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும், அதன்படி தேடுதல் நடவடிக்கைகள் ஒருங்கிணைந்து முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

கடலில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் தேடுதல் பணிகளில் சவால்கள் நிலவினாலும், கடற்படையின் முழு ஒத்துழைப்புடன் நடவடிக்கைகள் தொடரப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அமைச்சின் அதிகாரிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுடனும், தேடுதல் நடவடிக்கைகளின் முன்னேற்றத்துடனும் தொடர்பில் உள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் இளங்குமரன், ரஜீவன் உள்ளிட்ட பலரும் இந்த மீட்பு நடவடிக்கைகளில் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button