36வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் தேசிய மட்டப் போட்டிகள் இன்று ஆரம்பம்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இளைஞர் கழக சம்மேளனம் இணைந்து நடத்தும் 36வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் தேசிய மட்டப் போட்டிகள் இன்று (ஜூன் 6) ஆரம்பமாகியுள்ளன.
இம்முறை போட்டிகள் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள 14 இடங்களில் நடத்தப்படவுள்ளதுடன், ஆண் மற்றும் பெண் பிரிவுகளுக்கான போட்டிகள் தனித்தனியாக நடைபெறவுள்ளன.
பீச் வொலிபோல் (கடற்கரை கரப்பந்தாட்டம்), நீச்சல், பெட்மின்டன், கரம், கிரிக்கெட், கபடி, சதுரங்கம் (செஸ்), வலைப்பந்தாட்டம் (நெட்போல்), கூடைப்பந்தாட்டம், உதைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், எல்லே, கயிறிழுத்தல் மற்றும் இரவு மரதன் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நீர்கொழும்பு, இரத்தினபுரி, கொழும்பு, காலி, மாத்தறை, மஹரகம, குருநாகல், யாழ்ப்பாணம், கம்பஹா, ஹம்பாந்தோட்டை மற்றும் ஹோமாகம உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளன.
போட்டித் தொடர் இன்று நீர்கொழும்பு பீச் பார்க் கடற்கரையில் நடைபெறும் பீச் வொலிபோல் போட்டியுடன் ஆரம்பமாகியுள்ளது. இந்தப் போட்டிகள் ஜூன் 6 மற்றும் 7 ஆகிய இரு நாட்களிலும் நடைபெறுகின்றன.
பிரதேச மட்டப் போட்டிகளில் வெற்றி பெறும் போட்டியாளர்கள் மாவட்ட மட்டப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவார்கள். மாவட்ட மட்டத்தில் வெற்றி பெறுபவர்கள் தேசிய மட்டப் போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்படுவார்கள்.
36வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வுகள் மற்றும் பிரதான போட்டிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பு மாவட்டத்தின் ஹோமாகம, தியகம மைதானத்தில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.




