EN
Sports

டி20 உலகக் கிண்ணத்தில் துணிச்சலான ஆட்டமே வெற்றிக்கு முக்கியம் – சமரி அத்தபத்து

ரி20 உலகக் கிண்ணத்தில் வெற்றிபெற வேண்டுமாயின் சந்தேகம் மற்றும் பயமின்றி துணிச்சலுடன் மிகச்சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டும் என இலங்கை மகளிர் அணித் தலைவி சமரி அத்தபத்து தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 10வது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்றுவதற்காக இங்கிலாந்து பயணமாவதற்கு முன்னர், ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த தொடரில் இலங்கை அணி இரண்டாம் குழுவில் இடம்பிடித்துள்ளது. அதில் நடப்பு சம்பியன் நியூசிலாந்து, முன்னாள் சம்பியன்களான இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இலங்கை தனது முதல் போட்டியில் 12ஆம் திகதி பர்மிங்காமில் நடைபெறும் ஆரம்ப ஆட்டத்தில் வரவேற்பு நாடான இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

பலம்வாய்ந்த அணிகளான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக எவ்வாறு விளையாடுவது, சிறப்பு வியூகங்கள் உள்ளனவா என்ற கேள்விக்கு பதிலளித்த சமரி அத்தபத்து கூறியதாவது:

“நடப்பு சம்பியன் நியூசிலாந்தையும் இங்கிலாந்தையும் எதிர்கொள்வது எளிதல்ல. இங்கிலாந்துக்கு சொந்த மைதான அனுகூலம் உள்ளது. ஆனால் நாங்கள் வெற்றி பெற வேண்டுமாயின் நேர்மறையான மனநிலையுடன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அதனால் தான் வீராங்கனைகள் சுதந்திரமாக விளையாட வேண்டும் என நான் கேட்டுள்ளேன். களத்தில் இறங்கி தாக்குதல் மனநிலையுடன் விளையாடுவோம்.”

மேலும் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் அந்த அணியை அதன் சொந்த மண்ணில் வென்றது தங்களுக்கு பெரிய ஊக்கமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

“நாங்கள் கடந்த 8–9 மாதங்களில் இங்கிலாந்து செல்லவில்லை. ஆனால் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் பெற்ற வெற்றி எங்களை உற்சாகப்படுத்துகிறது. இப்போது அணி நல்ல மனநிலையிலுள்ளது. பல குறைபாடுகளை சரி செய்துள்ளோம். உலகக் கிண்ணத்தை வெல்வோம் என்று முன்கூட்டியே சொல்ல முடியாது. அது கடையில் வாங்கும் பொருள் அல்ல. போட்டிக்கு போட்டி கவனமாக விளையாடுவோம்.”

இலங்கை மகளிர் அணி இதுவரை உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னேறாத நிலையில், அதற்காக குறைந்தது 3 முதல் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“நாங்கள் அரையிறுதிக்கு சென்றால் அது வரலாற்று சாதனையாக இருக்கும். அது எளிதல்ல. ஆனால் அதிகபட்ச முயற்சியுடன் விளையாடுவோம்.”

புதிய பயிற்றுநர் ஜேமி சிடன்ஸ் அணியின் பந்துவீச்சு வியூகத்தில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாகவும் சமரி அத்தபத்து குறிப்பிட்டார்.

இதற்கமைய வழக்கமான சுழற்பந்துவீச்சை மட்டுமே நம்பாமல், வேகப்பந்துவீச்சாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் உள்ளதாகவும் அவர் கூறினார்.

“இம்முறை 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 1 சுழற்பந்துவீச்சாளர் என்ற வியூகம் பின்பற்றப்படலாம். அதேபோல் துடுப்பாட்ட வீராங்கனைகள் மற்றும் சகலதுறை வீராங்கனைகள் இணைந்து சமபலம் கொண்ட அணியாக விளையாடுவோம். ஒவ்வொரு போட்டியிலும் 160–170 ஓட்டங்களுக்கு மேல் பெறுவதே எங்கள் இலக்கு.”

Related Articles

Back to top button