பொதுநலவாய பளுதூக்கல் போட்டியில் 16 பதக்கங்களுடன் நாடு திரும்பிய இலங்கை அணி

சமோவா நாட்டில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய இளையோர் மற்றும் வளர்ந்தோர் பளுதூக்கல் போட்டிகளில் 16 பதக்கங்களை வென்ற இலங்கை அணி இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இலங்கை சார்பில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் மொத்தமாக 7 வெள்ளிப் பதக்கங்களையும் 9 வெண்கலப் பதக்கங்களையும் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்தப் போட்டிகள் சமோவா நாட்டின் ஆப்பியா நகரில் கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி முதல் மே 02ஆம் திகதி வரை நடைபெற்றன. இதில் 27 பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த சுமார் 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.
இந்த சர்வதேசப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பதக்கங்களை வென்ற அனைவரும் பாடசாலை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (08) அதிகாலை 4.25 மணியளவில் இந்தியாவிலிருந்து ஏ.ஐ.-277 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்களை வரவேற்கும் வகையில் Sri Lanka Weightlifting Federation அதிகாரிகளும் மாணவர்களின் பெற்றோர்களும் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.



