அந்நிய செலாவணி நெருக்கடி குறித்து அவசர அமைச்சரவையில் ஜனாதிபதி விசேட கவனம்

அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தில், நாட்டின் அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வுகளை கண்டறிவதும், தற்போதுள்ள வெளிநாட்டு நாணய கையிருப்புகளை பாதுகாப்பதும் குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன்போது ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், தற்போதைய சூழ்நிலையில் வெளிநாட்டு நாணயப் பயன்பாடு மிகவும் பொறுப்புணர்வுடனும் முறையான நிர்வாகத்துடனும் கையாளப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
இலங்கை போன்ற இறக்குமதிகளை அதிகம் சார்ந்துள்ள நாட்டிற்கு அந்நிய செலாவணியை பாதுகாப்பது மிகவும் கடினமான மற்றும் சவாலான காரியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், எந்த பொருட்கள் அத்தியாவசியமற்றவை என வகைப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து மிகுந்த அவதானத்துடன் முடிவெடுக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் கூறினார்.
ஒருவருக்கு அத்தியாவசியமற்றதாகத் தோன்றும் பொருள், மற்றொருவருக்கு அத்தியாவசியமானதாக இருக்கக்கூடும் என்பதால், இது தொடர்பாக நிதானமான அணுகுமுறை அவசியம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாட்டின் மொத்த டொலர் கையிருப்பில் பெரும்பகுதி எரிபொருள் மற்றும் மோட்டார் வாகன இறக்குமதிக்காகவே செலவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் இறக்குமதியை நிறுத்த முடியாத நிலையால், மாற்று நடவடிக்கையாக வாகன இறக்குமதியை தற்காலிகமாக கட்டுப்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது எனவும் தெரிவித்தார்.
ஆனால், வாகன இறக்குமதியை முழுமையாகத் தடைசெய்தால், தற்போது மீண்டும் புத்துயிர் பெற்று வரும் உள்நாட்டு வாகன சந்தை முற்றிலும் பாதிக்கப்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
இதனையடுத்து, டொலர் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதோடு, வாகன சந்தையை முழுமையாக பாதிக்காமல் பாதுகாக்கும் வகையில் மாற்று தீர்வொன்றை அமைச்சரவை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, வாகன இறக்குமதியை ஊக்கமிழக்கச் செய்யும் நோக்கில் விசேட கூடுதல் வரி ஒன்றை விதிக்கவும், அந்த வரி நடைமுறையை அடுத்த மூன்று மாதங்களுக்கு அமுல்படுத்தவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.




