EN
Local

நாட்டில் பெரிய வெங்காய விதை உற்பத்தி கிராமம் ஆரம்பம்

நாட்டில் பெரிய வெங்காய விதை உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், விசேட விதை உற்பத்தி கிராமமொன்றை ஆரம்பிப்பதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அநுராதபுரம் நாச்சதூவ விவசாயக் குடியேற்றப் பகுதியை பெரிய வெங்காய விதை உற்பத்தி கிராமமாக அபிவிருத்தி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் பி. சிசிர குமார தெரிவித்துள்ளார்.

நாட்டின் வருடாந்த பெரிய வெங்காயத் தேவையானது சுமார் 3 இலட்சத்து 25 ஆயிரம் மெற்றிக் தொன்னாக காணப்படுகின்ற நிலையில், தற்போது உள்நாட்டில் 50 ஆயிரம் மெற்றிக் தொன் வெங்காயமே உற்பத்தி செய்யப்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில், இந்த ஆண்டிற்குள் உள்நாட்டு வெங்காய உற்பத்தியை 70 ஆயிரம் மெற்றிக் தொன் வரை அதிகரிப்பதே இந்த விசேட திட்டத்தின் முக்கிய இலக்காகும் என விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டிலேயே தரமான பெரிய வெங்காய விதைகளை உற்பத்தி செய்வதன் மூலம், விதை இறக்குமதிக்காக வெளிநாடுகளுக்கு செலவாகும் பெருமளவிலான நிதியை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விசேட திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு நாளை திங்கட்கிழமை (25) நடைபெறவுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் பி. சிசிர குமார மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button