வெசாக் பண்டிகை வாழ்த்துச் செய்தி – பிரதமர்

புத்தபெருமானின் உன்னத போதனைகளுக்கு அமைவாக வாழ்வை வடிவமைத்து, தர்மத்தை நடைமுறைப்படுத்தும் இந்த புனிதமான காலகட்டத்தில், நாட்டின் அனைத்து மக்களுக்கும் எனது வெசாக் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெசாக் விளக்குகளும் கூடுகளும் வெளி உலகை ஒளிரச் செய்வதுபோல, இந்த வெசாக் காலம் எமது இதயங்களையும் கருணை, அன்பு, ஞானம் ஆகியவற்றால் ஒளிரச் செய்யும் வாய்ப்பாக அமைய வேண்டும். பேராசை, வெறுப்பு, அறியாமை ஆகியவற்றை நீக்கி, அமைதியும் சமாதானமும் நிறைந்த வாழ்க்கையை உருவாக்குவோம்.
“அபித்தரேத கல்யாணே” (நன்மையை நோக்கி விரைவாகச் செல்லுங்கள்) என்ற புத்த வாக்கியம் இவ்வாண்டின் தேசிய வெசாக் விழாவின் கருப்பொருளாக அமைந்துள்ளது. இது இன்றைய சமூகத் தேவைகளை பிரதிபலிப்பதுடன், குறுகிய எண்ணங்களையும் பாகுபாடுகளையும் தாண்டி, தர்மத்தின் ஒளியால் பிரகாசிக்கும் பொதுநல நாட்டை உருவாக்குவதற்கான ஊக்கத்தையும் வலிமையையும் வழங்குகிறது.
மகாநாயக்க தேரர்களின் வழிகாட்டுதலின் கீழும், அகில இலங்கை சாசன பாதுகாப்பு மண்டலத்தின் ஆசீர்வாதத்துடனும், புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும், பொதுநிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்யும் தேசிய வெசாக் விழாவிற்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசுக்கும் பௌத்த சாசனத்திற்கும் இடையிலான ஆழமான உறவின் மூலம் நீதியான ஆட்சியும், நாட்டின் முன்னேற்றமும், செழிப்பும் உறுதிப்படுத்தப்பட முடியும். பொருளாதார மற்றும் சமூக சவால்களை எதிர்கொள்ளும் இக்காலத்தில், “அனைத்து உயிரினங்களும் நலமுடன், மகிழ்ச்சியுடன், அமைதியுடன் வாழ்க” என்ற உயரிய இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு, இன, மத, சாதி வேறுபாடுகளை மீறி அனைவருக்கும் நீதி நிலைநாட்டும் சமூகத்தை உருவாக்க நாம் உறுதியேற்க வேண்டும்.
இயற்கையை நேசிக்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும், மத்திய மார்க்கத்தைப் பின்பற்றும் வெசாக் பண்டிகையைக் கொண்டாட அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். ஒழுக்கநெறிகளும் உயரிய பண்புகளும் நிறைந்த சமூகத்தை உருவாக்க நாம் ஒன்றிணைந்து முன்னேறுவோம்.
அனைவருக்கும் அமைதியும், புண்ணியமும், நலன்களும் நிறைந்த இனிய வெசாக் பண்டிகை நல்வாழ்த்துக்கள்! 🙏🪔🌸




