2026 உலக சுற்றுச்சூழல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

2026 உலக சுற்றுச்சூழல் தின தேசிய நிகழ்வு “காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் வெள்ளிக்கிழமை (05) காலை அலரி மாளிகையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுடன் இணைந்து ரிடிகல, அலியாவெடுணுவெவ, முலாகல, கோன்கெட்டியாவ மற்றும் கல்லஞ்சிய ஆகிய 5 வனப்பகுதிகள் வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தால் பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீடுகளாக அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, மேம்படுத்தப்பட்ட தேசிய பசுமை அறிக்கை வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
மேலும், கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தால் மாகம மணல் மேட்டுப் பகுதி பாதிப்புக்குள்ளாகும் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தினால் யானை வழித்தடங்கள் விடுவிக்கப்பட்டதுடன், “குடா புபுல” நீர் ஊற்று மற்றும் “கபுரெல்ல” வெந்நீர் சதுப்புநிலப் பகுதி ஆகியவை வன ஒதுக்கீடுகளாக பிரகடனப்படுத்தப்பட்டன.
இதன் போது “சொபா” சுற்றுச்சூழல் சஞ்சிகையின் 2026 முதலாவது பதிப்பு, “சொபா கெத” சுற்றுச்சூழல் சஞ்சிகை மற்றும் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான நூலும் வெளியிடப்பட்டன.
மேலும், இந்நிகழ்வு பூச்சிய கார்பன் உமிழ்வு திட்டமாக நடத்தப்பட்டதற்கான சான்றிதழ் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. காலநிலை மாற்றப் பிரிவின் ஓவியப் போட்டி மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் புதிய கண்டுபிடிப்பு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் எண்டன் ஜயகொடி, சுற்றுச்சூழல் அமைச்சின் பதில் செயலாளர் ஆர்.எச்.எம்.பி. அபேகோன், மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.எல்.ஆர்.பி. மாரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.




