நெடுந்தீவுக்கான பயணிகள் சேவையில் வடதாரகை படகு மீண்டும் சேவையில்

நெடுந்தீவுக்கான பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகு, திருத்தப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று (15) திங்கட்கிழமை முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.
குறிகாட்டுவான் – நெடுந்தீவு இடையே சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை, நெடுந்தாரகை மற்றும் குமுதினி ஆகிய மூன்று படகுகளும் பழுதடைந்திருந்ததால், நெடுந்தீவுக்கான போக்குவரத்தில் கடும் சிரமம் ஏற்பட்டிருந்தது.
இதையடுத்து, படகுகளை விரைவாக திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, வடதாரகை படகின் திருத்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று முதல் அது மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நெடுந்தாரகை படகு தற்போது காங்கேசன்துறை (KKS) துறைமுகத்தில் திருத்தப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பணிகள் நிறைவடைந்தவுடன் விரைவில் மீண்டும் சேவையில் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, குமுதினி படகு இயந்திரக் கோளாறு காரணமாக சேவையிலிருந்து விலக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் இயந்திர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகள் நிறைவடைந்த பின்னர், குமுதினி படகும் மக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் சேவையில் இணைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த படகுகள் மீண்டும் சேவையில் இணைக்கப்படுவதன் மூலம் நெடுந்தீவு மக்களும் பயணிகளும் எதிர்நோக்கியிருந்த போக்குவரத்து சிரமங்கள் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




