EN
Local

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம்: உள்நாட்டு பொறிமுறைக்குள் முடக்க முயற்சி என குற்றச்சாட்டு

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினையை உள்நாட்டு பொறிமுறைக்குள் மட்டுப்படுத்தும் முயற்சியில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (ICRC) ஈடுபட்டுள்ளதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் எஸ். சிவயோகநாதன் கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 5ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை கொழும்பில் செஞ்சிலுவை சங்கம் மூடிய அறை கலந்துரையாடலை ஏற்பாடு செய்ததாகவும், அதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடு முழுவதும் இருந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 20 பேர் பங்கேற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்காலத்தில் செஞ்சிலுவை சங்கம் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுடன் நேரடியாக பணியாற்றாமல், நிதியுதவி மற்றும் ஆதரவு வழங்கும் பங்காளியாக மட்டும் செயல்படவுள்ளதாக பங்கேற்பாளர்களிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், நீதியமைச்சு, ஜனாதிபதி அலுவலகம் மற்றும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் ஆகியவற்றின் மூலம் நடைபெறும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை நாடு முழுவதும் உள்ள சர்வோதய அமைப்பு மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிவயோகநாதன் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், ஆரம்ப நடவடிக்கைகள் வட மாகாணத்தை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டு, வெற்றியடைந்தால் கிழக்கு மாகாணத்திற்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற வடக்கு மற்றும் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சில பெண்கள் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும், பல பாதிக்கப்பட்டவர்கள் இதன் மூலம் சர்வதேச நீதிக்கான தங்களின் நீண்டகால கோரிக்கைகள் பலவீனமடையக்கூடும் என அச்சம் தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்விடயத்தில் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும், சர்வதேச பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Back to top button