பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளில் காணாமல் போன கடற்றொழிலாளர்களின் குடும்பங்களை அமைச்சர் சந்திப்பு

பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்று இதுவரை கரைக்கு திரும்பாத கடற்றொழிலாளர்களின் குடும்பங்களை கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் அவர்கள் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பான தகவலை அவர் இன்று (07.06.2026) சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.
குடும்பங்களுடன் நேரடி சந்திப்பு
தனது பதிவில் அமைச்சர் தெரிவித்ததாவது, தொழிலுக்குச் சென்று இதுவரை கரை திரும்பாத கடற்றொழிலாளர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து அவர்களின் கவலைகளையும் எதிர்பார்ப்புகளையும் கேட்டறிந்ததாக கூறியுள்ளார்.
இந்த துயரமான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தனியாக இல்லை என்பதை உறுதிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசின் ஆதரவு உறுதி
அரசாங்கமும் கடற்றொழில் அமைச்சும் தொடர்ந்து அவர்களுடன் நிற்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போன கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சமூக சவால்களை கருத்தில் கொண்டு தேவையான அனைத்து உதவிகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பிள்ளைகளின் கல்வி தேவைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் உள்ளிட்ட விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன
கடலில் காணாமல் போனவர்களின் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருவதாகவும், ஆனால் உறுதியான தகவல்களின் அடிப்படையிலேயே முடிவுகளுக்கு வர வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னர் தென்னிலங்கையில் இடம்பெற்ற இதே போன்ற சம்பவங்களில் பல மாதங்களுக்குப் பிறகு மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட அனுபவங்களும் இருப்பதாக அவர் நினைவூட்டியுள்ளார்.
எனவே நம்பிக்கையை இழக்காமல் தேடுதல் மற்றும் தகவல் திரட்டும் நடவடிக்கைகள் தொடரப்படும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை அரசாங்கம் பகிர்ந்து கொள்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த கடினமான நேரத்தில் அவர்களுடன் துணையாக இருந்து, அவர்களின் எதிர்கால பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




