EN
Local

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் ‘மொடியுல்’ முறை மூலம் பல்துறைசார் கல்விக்கு மாணவர்களை வழிநடத்தலாம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள ‘மொடியுல்’ (Module) முறைமையின் ஊடாக, பல்வேறு துறைகளின் அறிவை ஒருங்கிணைக்கும் பல்துறைசார் கல்விக்கு (Multidisciplinary Education) மாணவர்களை வழிநடத்த முடியும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

2026 ஜூன் 3 ஆம் திகதி இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் நடைபெற்ற கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான தேசிய வழிநடத்தல் குழுக் கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இக்குழுவில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் உபாலி பன்னிலகே ஆகியோர் உறுப்பினர்களாக செயற்படுகின்றனர்.

கல்விச் சீர்திருத்தத்தின் ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு பணிகளை வழிநடத்தும் இந்தக் குழுவின் முக்கிய நோக்கம், கல்வி அமைப்பின் அனைத்து பரிமாணங்களையும் தரப்படுத்தப்பட்ட முறையில் மேம்படுத்தி உயர்தரமான கல்விச் சீர்திருத்தங்களை நாட்டில் அறிமுகப்படுத்துவதாகும்.

கூட்டத்தின் போது, ஐந்து பிரதான துறைகளுக்குப் பொறுப்பான உபகுழுக்கள் தங்களது முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பித்ததுடன், அவை தொடர்பாக விரிவான கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

பிரதமர் மேலும் தெரிவிக்கையில்:

  • மாணவர்களுக்கு தேவையற்ற கல்வி அழுத்தங்கள் ஏற்படாத வகையில் சமநிலையான மற்றும் பயனுள்ள பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
  • அழகியல், வாழ்க்கைத்திறன் மற்றும் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும்.
  • மாணவர்களின் தொடர்ச்சியான கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கல்வி கட்டமைப்பு வடிவமைக்கப்பட வேண்டும்.
  • தரம் 1 முதல் தரம் 13 வரை கல்விச் சீர்திருத்தங்களின் முழுமையான நோக்கங்களை மக்களுக்கு விளக்கும் சமூக விழிப்புணர்வு திட்டம் அவசியமாகும்.

மனிதவள மேம்பாடு தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதமர், ஆசிரியர் மையங்களை மேம்படுத்துவதற்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய கல்வியியற் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதிலும் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஓ.ஜி. தயாரத்ன பண்டார, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அமைச்சு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்-அதிபர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button