ஹொரணை வங்கி கொள்ளை: ரூ.3.5 கோடி பணம் கொள்ளையடிப்பு சம்பவத்தில் உதவி மேலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி கைது

ஹொரணை பகுதியில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றில் ரூபா 3 கோடியே 50 இலட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், வங்கியின் உதவி மேலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை (03) பிற்பகல் 2.55 மணியளவில், வங்கியின் ஊழியர் ஒருவர் இரண்டு பணப்பைகளுடன் வங்கியின் பின்புறக் கதவு வழியாக வெளியேறியபோது, அங்கு வந்த நபர் ஒருவர் அந்தப் பணப்பைகளை பலவந்தமாக பறித்துக்கொண்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கொள்ளையடிக்கப்பட்ட பணம், வங்கியின் ஏடிஎம் இயந்திரங்களில் வைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட ரூபா 3 கோடியே 50 இலட்சம் தொகையாகும்.
சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், வங்கியின் உள்புற ஊழியர்களுக்கு இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகளை விரிவுபடுத்தினர்.
அதன் அடிப்படையில், குறித்த கொள்ளைச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் வங்கியின் உதவி மேலாளரும் பாதுகாப்பு அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீட்பதற்கான தேடுதல் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




