EN
Local

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு A9 வீதியில் விசேட சிரமதானம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு A9 வீதியில் விசேட சிரமதானம்

04 ஜூன் 2026

2026 ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் தினம்Climate Action” (காலநிலை நடவடிக்கை) என்ற கருப்பொருளின் கீழ் அனுஷ்டிக்கப்படுவதையொட்டி, கிளிநொச்சி மாவட்டத்தில் விசேட சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி பொலிஸ் திணைக்களமும் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து, வர்த்தகர்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, A9 வீதியின் கரடிப்போக்கு சந்தியிலிருந்து இரணைமடு சந்தி வரையிலான பகுதியில் நடைபெற்றது.

இதன்போது, வீதியின் இருபுறங்களிலும் காணப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன.

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைப்பதற்கும், தூய்மையான மற்றும் நிலையான சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கும் சமூகப் பங்களிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்த சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், கிளிநொச்சி மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அங்கம்மன, கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி முகமட் சுல்தான் நஜீம், மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற சவால்களை எதிர்கொள்வதில் அரச நிறுவனங்கள் மட்டுமன்றி பொதுமக்களும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம் என இந்நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், பொது இடங்களில் கழிவுகளை முறையற்ற வகையில் கொட்டுவதைத் தவிர்த்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அனைவரும் செயற்பாட்டுடன் பங்களிக்க வேண்டியதன் அவசியமும் இச்சிரமதானப் பணியின் ஊடாக எடுத்துக்காட்டப்பட்டது. 🌱♻️🌍

Related Articles

Back to top button