15 வயது சிறுமி துஷ்பிரயோகம் விவகாரம் தொடர்பில் பொலிஸார் மீது குற்றச்சாட்டு

15 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராக கடந்த ஏப்ரல் 10ஆம் திகதியே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய அமைப்பாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் அமைந்துள்ள முன்னணி சோசலிசக் கட்சி காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் மூலம் இது நீண்டகாலமாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல் என்பது வெளிப்பட்டதாக தெரிவித்தார்.
எனினும், இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸார் நீண்டகாலமாக மௌனம் காத்திருந்ததாகவும், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கடுமையான அழுத்தங்கள் மற்றும் தலையீடுகளுக்குப் பின்னரே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், சந்தேகநபரான தேரரை கைது செய்வதையோ அல்லது விளக்கமறியலில் வைப்பதையோ தவிர்ப்பதற்காக திட்டமிட்ட வகையில் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் அனுமதித்து பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இரண்டு வாரங்களுக்குள் அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்ததாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த போதிலும், தேரரின் கையடக்கத் தொலைபேசியில் இருந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் 84 அழைப்புகளுக்கான தரவுகளும், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கோரிய டி.என்.ஏ பரிசோதனை அறிக்கைகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, தேரருக்கு பிணை வழங்குவதற்கு பொலிஸாரும் சட்டமா அதிபர் திணைக்களமும் எந்த எதிர்ப்பையும் வெளியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சஞ்சீவனிக்கு எதிராக, சமூக ஊடகங்களில் திட்டமிட்ட அவதூறு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும், அதற்கு பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவுகளின் பின்னணி இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோருடன் குறித்த தேரருக்கு உள்ள அரசியல் மற்றும் குடும்ப தொடர்புகளே சட்டத்தை வளைப்பதற்கான காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த விவகாரம் குறித்து மௌனம் காத்துவருவதாகவும் அவர் விமர்சித்தார்.
இவ்வாறான குற்றச்செயல்களுக்கு எதிராக சமூகமே ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும், பிணை வழங்கப்பட்டதன் பின்னர் வழக்கை நீண்டகாலம் இழுத்தடிக்க முயற்சிகள் இடம்பெறலாம் என்றும் துமிந்த நாகமுவ தெரிவித்தார்.




