எரிபொருள் விலை அதிகரிப்பு பொருளாதார பாதிப்பை தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டது – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர்

பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் புதன்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், உலக சந்தை விலைக்கு ஏற்ப தேசிய மட்டத்தில் எரிபொருள் விலை முழுமையாக நிர்ணயிக்கப்படவில்லை. விலை திருத்தத்தின் போது திறைசேரியும், பெற்றோலிய கூட்டுத்தாபனமும் ஒரு பகுதியை ஏற்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.
முந்தைய காலங்களில் உலக சந்தை விலை அதிகரித்த போதிலும், கூட்டுத்தாபனத்தை நட்டத்தில் வைத்தே குறைந்த விலையில் எரிபொருள் வழங்கப்பட்டதாகவும், இதனால் கொள்வனவு விலைக்கும் விற்பனை விலைக்கும் இடையில் பெரிய பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் விளைவாக 2022 ஆம் ஆண்டில் எரிபொருள் இறக்குமதிக்கான டொலர் திரட்ட முடியாத நிலை உருவாகி, விநியோகம் பாதிக்கப்பட்டு நாடு கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை நிலைமாறி வருவதாகவும், குறிப்பாக மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஒவ்வொரு மாதமும் எரிபொருள் கொள்வனவுக்காக சுமார் 318 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுவதாகவும், அந்த நிதியை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமே திரட்ட வேண்டிய நிலை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், எதிர்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) கலந்துரையாடி எரிபொருள் விலை தீர்மானிக்கப்படும் எனவும், எரிபொருள் விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர் உறுதியளித்தார்.
மத்திய கிழக்கில் நிலைமை சீரானால் எரிபொருள் விலை குறைய வாய்ப்பு உள்ளதாகவும், அந்த பயன் மக்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.




