EN
Local

40 நாடுகளுக்கான இலவச சுற்றுலா விசா திட்டம் இன்று முதல் அமல்

இலங்கைக்கு குறுகிய கால விஜயங்களை மேற்கொள்ளும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கான 30 நாட்கள் செல்லுபடியாகும் இலவச சுற்றுலா விசா வசதி இன்று திங்கட்கிழமை (25) முதல் அமலுக்கு வந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஆஸ்திரியா, மலேசியா, சவுதி அரேபியா, ஜேர்மனி, நேபாளம், தென் கொரியா, இந்தியா, கனடா, சீனா, ஜப்பான், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட 40 நாடுகளின் பிரஜைகள் இலவச விசா சலுகையைப் பெறவுள்ளனர்.

இத்திட்டம் இராஜதந்திர, உத்தியோகபூர்வ, சேவை மற்றும் சாதாரண கடவுச்சீட்டுகளை கொண்ட பிரஜைகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த 40 நாடுகளின் பிரஜைகள் மற்றும் இலங்கையுடன் பரஸ்பர விசா ஒப்பந்தம் கொண்டுள்ள மாலைதீவு, சீஷெல்ஸ் மற்றும் சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்தவர்களும் இலங்கைக்கு வருவதற்கு முன் கட்டாயமாக இணையவழி சுற்றுலா அனுமதி (ETA) பெற்றிருக்க வேண்டும்.

இந்த ETA அனுமதி மாலைதீவு, சீஷெல்ஸ், சிங்கப்பூர் மற்றும் குறித்த 40 நாடுகளின் பிரஜைகளுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

இந்த இலவச விசா திட்டத்தின் கீழ், சுற்றுலாப் பயணிகள் 90 நாட்கள் வரை செல்லுபடியாகும் விசாவைப் பெற முடியும். ஆரம்ப 30 நாட்கள் காலப்பகுதிக்குள், இலங்கைக்கு முதல் முறையாக வந்த திகதியிலிருந்து இருமுறை பிரவேசிக்கும் அனுமதியும் வழங்கப்படும்.

30 நாட்களுக்கு மேல் இலங்கையில் தங்க விரும்புவோர், அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி விசா காலத்தை நீடிப்பதற்காக விண்ணப்பிக்கலாம்.

மேலும், இந்த இலவச ETA திட்டத்திற்கு தகுதியற்ற பிற நாடுகளின் பிரஜைகள், இலங்கையின் நடைமுறையிலுள்ள சாதாரண இணையவழி சுற்றுலா அனுமதி விதிமுறைகளின் அடிப்படையில் விசா பெற வேண்டும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button