மகளை பாலியல் வன்புணர்வு செய்த தந்தைக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை

கல்முனை மேல் நீதிமன்றம் தனது மகளை பாலியல் வன்புணர்வு மற்றும் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட தந்தைக்கு மொத்தமாக 25 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கு 2026 மே 15 ஆம் திகதி கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
சட்ட மாஅதிபர் திணைக்களத்தினால் 2024 ஆம் ஆண்டு சந்தேகநபருக்கு எதிராக இரண்டு தனித்தனி குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் சட்ட மாஅதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
முதலாவது குற்றப்பத்திரிகையில், தனது மகளை மூன்று முறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும், இரண்டாவது குற்றப்பத்திரிகையில் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட சிறுமி 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மூன்று சந்தர்ப்பங்களில் தந்தையால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், மேலும் ஒருமுறை பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் ஆளானதாகவும் தெரிவித்திருந்தார்.
சந்தேகநபர் முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், தனது மனநலம் பாதிக்கப்பட்ட மனைவியுடன் தலைமறைவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது அக்கரைப்பற்று பகுதியில் உள்ள சிறுவர் பாதுகாப்பு இல்லமொன்றின் கண்காணிப்பில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கின் தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பாலியல் வன்புணர்வு தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளில் ஒன்றில் குற்றவாளி எனத் தீர்மானித்து, 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதித்தார். மற்ற இரண்டு குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
மேலும், பாரதூரமான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தந்தைக்கு கூடுதலாக 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதன் மூலம், குற்றவாளிக்கு மொத்தமாக 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.




