EN
Local

கிழக்கு மாகாணத்தில் பெண்களின் அரசியல் பங்கேற்பை வலுப்படுத்தும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள்

அரசியலில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பதையும், பெண்கள் தொடர்பான விடயங்களில் செயற்படும் சிவில் சமூக அமைப்புகளுக்கிடையில் வலையமைப்பை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு, Search for Common Ground (SFCG) அமைப்பானது கிழக்கு மாகாணத்தில் பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இந்தத் திட்டத்திற்கான நிதியுதவியை ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP) வழங்குகிறது. திட்டத்தின் முதற்கட்டமாக, அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கான பயிற்சி நிகழ்வுகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கான செயலமர்வுகள் உள்ளிட்ட பல திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன.

முதற்கட்ட நடவடிக்கைகளில் இருந்து பெறப்பட்ட பின்னூட்டங்கள் மற்றும் முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொண்டு, தற்போது திட்டத்தின் இரண்டாம் கட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இக்கட்டத்தில், பெண்கள் மேம்பாட்டுக்காக பணியாற்றும் அமைப்புகளிடமிருந்து சமர்ப்பிக்கப்பட்ட செயற்றிட்டங்கள் தெரிவுசெய்யப்பட்டு, அவை தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, பெண்கள் அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்ற பெண் பிரதிநிதிகளுக்காக “தலைமைத்துவமும் தொடர்பாடலும்” என்ற தலைப்பில் ஒரு பயிற்சி செயலமர்வு கடந்த மே 13ஆம் திகதி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் சட்டத்தரணி சந்திரலிங்கம் சந்திரகுமார் வளவாளராக கலந்துகொண்டு, தலைமைத்துவ திறன்களை எவ்வாறு மேம்படுத்துவது மற்றும் தொடர்பாடல் திறன் பிரதிநிதிகளின் பணிகளில் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது என்பன குறித்து பயிற்சியளித்தார். இந்நிகழ்வில் மொத்தம் 20 உள்ளூராட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

குழு செயற்பாடுகளின் போது, உள்ளூராட்சி நிறுவனங்களில் பெண்கள் தலைமைத்துவத்தை முன்னெடுக்கும்போது எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் தொடர்பாடல் முறைகளில் காணப்படும் குறைபாடுகள் குறித்தும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

Related Articles

Back to top button