EN
Local

சமத்துவமின்மை மற்றும் AI சவால்களை எதிர்கொள்வதற்கு ஆழமான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

சமத்துவமின்மையும் செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்படுத்தும் புதிய சவால்களும் அதிகரித்து வரும் நிலையில், பாடத்திட்ட மாற்றங்களைத் தாண்டிய ஆழமான கட்டமைப்புரீதியிலான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயர் துஷாந்த ரொட்ரிகோவின் அழைப்பின் பேரில், மே 30 ஆம் திகதி Cathedral of Christ the Living Saviour தேவாலயத்தில் நடைபெற்ற பேராயர் சிறில் அபேநாயக்க நினைவு விரிவுரையில் உரையாற்றும் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.

“21ஆம் நூற்றாண்டில் இலங்கை மற்றும் அதற்கு அப்பால் கல்வியின் எதிர்காலத்தை வடிவமைத்தல்” என்ற தலைப்பில் உரையாற்றிய பிரதமர், இலங்கையின் பல்மத ஒற்றுமையும் சமூகப் பன்முகத்தன்மையும் கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டார்.

இலங்கையின் கல்விக் கொள்கையின் வரலாற்றை சுட்டிக்காட்டிய அவர், 1971 ஆம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி, நாட்டில் நிலவும் திறன்கள் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கிடையிலான பொருத்தமின்மை மற்றும் அரச வேலைவாய்ப்புகளை நோக்கிய “வரிசை மனநிலை” ஆகியவை பொருளாதார சவால்களுக்கு காரணமாக இருந்ததாக தெரிவித்தார்.

பல தசாப்தங்களாக STEM கல்வி மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தாலும், அவை மட்டும் நாட்டின் கட்டமைப்புச் சிக்கல்களை தீர்க்க போதுமானதாக இல்லை என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, இலவசக் கல்வியின் நோக்கம் வேலைவாய்ப்பு உருவாக்குவதோடு மட்டுமல்லாது, விமர்சன சிந்தனை, ஒழுக்கம் மற்றும் அரசியல் விழிப்புணர்வு கொண்ட குடிமக்களை உருவாக்குவதாகும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

கல்வி அமைப்பில் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய சவால்களாக அவர் பின்வருவனவற்றை சுட்டிக்காட்டினார்:

  • கல்வி நிறுவனங்களுக்கிடையிலான சமத்துவமின்மை
  • சமூகப் பொறுப்புணர்வுள்ள குடிமக்களை உருவாக்குவதில் உள்ள குறைபாடு
  • பெண்களின் கல்வி சாதனைகள் மற்றும் தொழில்துறையில் அவர்களின் பங்கேற்புக்கிடையிலான இடைவெளி
  • தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் AI-ஐ ஏற்க வேண்டிய தேவை
  • கல்வியை வெறும் சான்றிதழ் பெறும் கருவியாகக் கருதும் நிலை

செயற்கை நுண்ணறிவை எதிர்கொள்ள டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் இணைய பாதுகாப்பு திறன்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கல்வி என்பது உலகை புரிந்து கொண்டு அதை மாற்றும் ஒரு செயல் எனவும், ஆசிரியர் தொழிலை மீண்டும் சமூகத்தில் உயர்ந்த மதிப்புடைய தொழிலாக நிலைநிறுத்த வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

இறுதியில், கல்விச் சீர்திருத்தங்களின் முக்கிய இலக்கு சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் நம்பிக்கைக்குரிய தலைவர்களை உருவாக்குவதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Articles

Back to top button