புற்றுநோயில் இருந்து மீண்ட குழந்தைகளுக்கு முழுமையான வாழ்க்கையை வழங்குவது அனைவரின் பொறுப்பு

புற்றுநோயில் இருந்து மீண்டு வரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மற்றும் முழுமையான வாழ்க்கையை வழங்குவது அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் 79ஆவது உலக சுகாதார பேரவை நேற்று (18) ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் ஆரம்பமானது. இந்த மாநாடு உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயசஸ் தலைமையில் நடைபெற்றதுடன், 194 உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
டொமினிகன் குடியரசைச் சேர்ந்த டாக்டர் விக்டர் எலியாஸ் அட்டல்லா லாஜாம் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எலிசபெத் பவுமே-ஷ்னைடர், கானா ஜனாதிபதி ஜோன் டிராமணி மகாமா உள்ளிட்ட பலரும் மாநாட்டில் உரையாற்றினர்.
“ஆரோக்கியத்திற்காக ஒரு உலகம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த உலக சுகாதார பேரவையுடன் இணைந்து, WHO Global Initiative for Childhood Cancer (WHO GICC) ஏற்பாடு செய்த விசேட அமர்வும் நேற்று ஆரம்பமானது.
“உயிர்வாழ்வை அளவிடுதல், முன்னேற்றத்தை உருவாக்குதல் – குழந்தைப் பருவப் புற்றுநோய்க்கான WHO உலகளாவிய முயற்சி மூலம் சமத்துவ முன்னேற்றம்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த அமர்வின் முக்கிய நோக்கம், 2030ஆம் ஆண்டளவில் உலகளவில் குழந்தைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் உயிர்வாழ்வு விகிதத்தை குறைந்தது 60% ஆக உயர்த்துவதாகும்.
இந்த அமர்வில், “Measuring Survival, Driving Change” என்ற புதிய உலகளாவிய அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிடுவதாக அறிவித்தது. உலகில் முதன்முறையாக குழந்தைகள் மற்றும் இளம்பருவ லிம்பாய்டு லுகேமியா நோயாளிகளின் 5 ஆண்டு உயிர்வாழ்வு விகிதம் நாடு வாரியாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உலக சுகாதார அமைப்பின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்திய மாநாட்டின் தலைவரும் இலங்கை சுகாதார அமைச்சருமான டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த அமர்வில் உரையாற்றினார்.
ஆரம்ப கட்டத்தில் புற்றுநோயை கண்டறிதல், சிகிச்சை மற்றும் பராமரிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாக உலகளவில் புற்றுநோயிலிருந்து உயிர் பிழைக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மிகப்பெரிய சாதனையாகும் என அவர் குறிப்பிட்டார்.
குழந்தைப் பருவப் புற்றுநோயில் உண்மையான வெற்றி என்பது எத்தனை குழந்தைகள் உயிர் பிழைக்கின்றனர் என்பதிலல்ல; அவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதில்தான் உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
புற்றுநோயை வென்ற ஒவ்வொரு குழந்தைக்கும் ஆரோக்கியமான, கண்ணியமான மற்றும் நிறைவான வாழ்க்கையை வழங்குவது அனைவரின் பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், குழந்தைப் புற்றுநோயில் இருந்து மீண்டவர்களுக்கான வாழ்நாள் முழுமையான பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்த இலங்கை உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
உலக சுகாதார அமைப்பு, சர்வதேச பங்காளிகள், சுகாதார நிபுணர்கள், சமூக அமைப்புகள் மற்றும் நோயிலிருந்து மீண்டவர்களுடன் இணைந்து இலங்கை தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
அனைவருக்கும் இலவச சுகாதார சேவையை வழங்கும் கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ள இலங்கையின் தேசிய சுகாதார அமைப்பு, புற்றுநோயைக் கண்டறிதல், சிகிச்சை, மறுவாழ்வு, உளவியல் ஆதரவு மற்றும் நீண்டகால பராமரிப்பு ஆகியவற்றிற்கு வலுவான அடித்தளத்தை வழங்குகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
குழந்தைப் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான பராமரிப்பு மருத்துவமனைகளில் மட்டுமே இருக்கக்கூடாது; அது ஆரம்ப சுகாதார சேவைகள், பாடசாலைகள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களுடன் இணைந்த தொடர்ச்சியான பராமரிப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
புற்றுநோயிலிருந்து மீண்ட குழந்தைகள் இதய நோய்கள், நாளமில்லா சுரப்பி பிரச்சினைகள், கற்றல் சிரமங்கள், மனநல சிக்கல்கள், இனப்பெருக்க சுகாதார பிரச்சினைகள் மற்றும் சமூக, பொருளாதார சவால்களை எதிர்கொள்ளக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்காக நோயாளியை மையமாகக் கொண்ட நீண்டகால சுகாதார அணுகுமுறைகள் அவசியம் என்றும் கூறினார்.
அதன்படி, குழந்தைப் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட பின்தொடர்பு சேவைகளை இலங்கை வலுப்படுத்தி வருகிறது.
மேலும், மருத்துவ அதிகாரி சுகாதார சேவைகள், பொது சுகாதார தாதியர் சேவைகள், தாய் மற்றும் குழந்தை சுகாதார திட்டங்கள் மற்றும் “ஆரோக்யா நலன்புரி நிலையங்கள்” போன்ற திட்டங்கள் மூலம் சமூக மட்ட ஆதரவு சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
சமூக சுகாதார கல்வி, உளவியல் ஆலோசனை, ஊட்டச்சத்து வழிகாட்டுதல் மற்றும் டிஜிட்டல் சுகாதார தகவல் அமைப்புகளையும் மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட WHO GICC திட்டம் தற்போது உலகின் 87 நாடுகளில் செயல்பட்டு வருவதாகவும், அதில் 50 நாடுகள் குழந்தைப் புற்றுநோய் கட்டுப்பாட்டை தமது தேசிய சுகாதார கொள்கைகளில் இணைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
இந்த மாநாட்டில் சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட இலங்கை சுகாதார அமைச்சின் உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.




