இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மை இன்னும் அச்சுறுத்தல் நிலையில் – சர்வதேச நாணய நிதியம்

இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மை இன்னும் அச்சுறுத்தல் நிலையிலேயே இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப் பிரதானி Evan Papageorgiou, அண்மையில் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு மத்திய கிழக்கில் நடைபெறும் மோதல்களும், உலக சந்தையில் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலையேற்றங்களுமே பிரதான காரணங்கள் என தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின் 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் சபை ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
இதன் மூலம் இலங்கைக்கு மேலும் 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி விடுவிக்கப்படவுள்ளது.
பொருளாதாரத்தில் முன்னேற்றம்
2022 ஆம் ஆண்டின் தீவிர பொருளாதார நெருக்கடியுடன் ஒப்பிடுகையில், தற்போது இலங்கை பொருளாதார ரீதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அவர் கூறினார். இவ்வாண்டு பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
ரூபா வீழ்ச்சி இயல்பானது
மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள மோதல்களின் தாக்கத்தால் உலகளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளதாகவும், அதன் விளைவாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தது இயல்பானதொரு நிலைமை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அழுத்தங்களை சமாளிப்பதற்காக இலங்கை அதிகாரிகள் பொருத்தமான தற்காலிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பணவீக்க கட்டுப்பாடு
பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் விலை நிலைத்தன்மையை பேணவும் இலங்கை மத்திய வங்கி நாணயக் கொள்கையை இறுக்கமாக்கியுள்ளதாகவும், வெளியக அழுத்தங்களின் போது இது பொருத்தமான நடவடிக்கையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் தற்காலிக நிவாரணங்கள்
தற்போதைய பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசாங்கம் வழங்கிவரும் தற்காலிக நிவாரணங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்தார். அவை தற்காலிக நடவடிக்கைகள் என்பதால் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.
கடன் ஸ்திரத்தன்மை இன்னும் சவாலானது
கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மூலம் இலங்கையின் கடன் நிலைமை முன்னேற்றமடைந்திருந்தாலும், கடன் ஸ்திரத்தன்மை இன்னும் அச்சுறுத்தல் நிலையில் தொடர்வதாக அவர் எச்சரித்தார்.
புதிய இறக்குமதி கட்டுப்பாடுகள் தேவையில்லை
இறக்குமதி கட்டுப்பாடுகள் நீண்டகால பொருளாதார மீட்சிக்கு தீர்வாக அமையாது என்றும், மேலும் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதையோ அவற்றை விரிவுபடுத்துவதையோ சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய IMF திட்டம் குறித்து பேச்சுவார்த்தை இல்லை
இலங்கைக்காக புதிய செயற்திட்டமொன்றை அறிமுகப்படுத்துவது குறித்து தற்போது எந்தவித கலந்துரையாடலும் நடைபெறவில்லை என்றும், தற்போதுள்ள திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதே முன்னுரிமை எனவும் அவர் தெரிவித்தார்.




