EN
Local

ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சைக்கு 160,000 இற்கும் அதிகமான பட்டதாரிகள் விண்ணப்பம்

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு 160,000 இற்கும் அதிகமான பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் ஏனைய பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்காக நடத்தப்பட்ட இந்தப் போட்டிப் பரீட்சை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) நாடு முழுவதும் உள்ள 1,048 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.

இதற்காக அரச சேவையில் உள்ள 66,991 விண்ணப்பதாரர்களும், ஏனைய 96,442 விண்ணப்பதாரர்களும் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர்.

மேலும், விசேட தேவையுடைய 323 விண்ணப்பதாரர்களுக்கு பரீட்சையில் தோற்றுவதற்கான சிறப்பு வசதிகளும் பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டிருந்தன.

கடந்த 2023ஆம் ஆண்டு, அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சையை நடத்த இலங்கை பரீட்சைகள் திணைக்களம் திட்டமிட்டிருந்தது. எனினும், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலவிய வழக்கு நடவடிக்கைகள் காரணமாக அந்தப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டது.

அனைத்து வழக்கு நடவடிக்கைகளும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் நோக்கில், இம்முறை அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மட்டுமன்றி ஏனைய பட்டதாரிகளும் தோற்றக்கூடிய வகையில் பரீட்சை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button