ஜனாதிபதி மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் (UDA) சிரேஷ்ட அதிகாரிகள் இடையிலான முக்கிய கலந்துரையாடல் திங்கட்கிழமை (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் எதிர்காலத்தில் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன், இவ்வருடத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை தற்போதைய நிதியாண்டுக்குள் முறையாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
பல அரச நிறுவனங்கள் இணைந்து செயல்படுத்தவுள்ள திட்டங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்துரையாடி இறுதி தீர்மானங்களை எடுப்பது, மேலும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் மற்றும் பராமரிக்கும் பொறுப்புகளை தெளிவாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்குவது போன்ற விடயங்களும் விரிவாக பேசப்பட்டன.
களனி கங்கை சார்ந்த வெள்ளக் கட்டுப்பாட்டு திட்டம், கொழும்பு நகரின் நீர் முகாமைத்துவ வேலைத்திட்டங்கள், பேர வாவி அபிவிருத்தித் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள இரத்மலானை, மொரட்டுவை போன்ற பகுதிகளில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான வீடமைப்பு திட்டங்களின் அவசியம் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
சில முக்கிய திட்டங்களை திறம்பட முகாமைத்துவம் செய்வதற்காக விசேட நிர்வாக மாதிரி ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இருப்பதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.
இந்த கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கபில சி.கே. பெரேரா, நகர அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் எம்.ஜி. ஹேமசந்திர உள்ளிட்ட பல உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
அத்துடன், நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், தேசிய பெளதீக திட்டமிடல் திணைக்களம் மற்றும் கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.




