புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் குற்றவாளி ஒருவர் சிறையில் உயிரிழப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவர் இன்று திங்கட்கிழமை (20) யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஏற்கனவே யாழ்ப்பாணம் உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது. பின்னர், தமக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு அவர்கள் கொழும்பு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தனர்.
எனினும், கொழும்பு நீதிமன்றமும் முன்னதாக வழங்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்பை உறுதிப்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, தீர்ப்பை வாசிப்பதற்காக குற்றவாளிகள் இன்று யாழ்ப்பாணம் உயர்நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டியிருந்தது.
இதற்கமைய அவர்கள் நேற்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை குறித்த கைதி தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




