போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கபில பெரேரா பதவி விலக தீர்மானம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் Kapila Perera பேராசிரியர் கபில பெரேரா தனது பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரின் அடிப்படை உரிமைகளை அவர் மீறியுள்ளதாக அண்மையில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்தே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பேராசிரியர் கபில பெரேரா தனது பதவி விலகல் தீர்மானத்தை ஜனாதிபதி Anura Kumara Dissanayake அநுர குமார திசாநாயக்கவிடம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிற்கும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
நீண்டகாலமாக பொதுச் சேவையில் பணியாற்றிய அவர், தனது சேவைக்காலம் நிறைவடைந்ததை அடுத்து இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்வித்துறையிலிருந்து பொதுச் சேவைக்கு பிரவேசித்த பேராசிரியர் கபில பெரேரா, இதற்கு முன்னர் University of Moratuwa மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ளார்.
அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து விலகிய பின்னர், அவர் மீண்டும் பல்கலைக்கழக சேவையில் இணையத் தயாராகி வருவதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




