பிரதமர் ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்

22ஆவது ஆண்டு காமன்வெல்த் கல்வி மாநாடு மற்றும் Commonwealth of Learning (COL) 2026 ஆளுநர் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய உத்தியோகபூர்வ விஜயமாக ஐக்கிய இராச்சியத்திற்கு பயணமானார்.
இந்த விஜயத்தின் போது, கல்வி, அபிவிருத்தி ஆய்வுகள், ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச கூட்டாண்மை தொடர்பான உயர்மட்ட கல்வி மற்றும் இராஜதந்திர சந்திப்புகளில் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளார்.
விஜயத்தின் ஒரு பகுதியாக, ஐக்கிய இராச்சிய கல்வித் துறை அமைச்சில், அந்நாட்டு கல்வி செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சனை பிரதமர் சந்தித்து கல்வி மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் ஒத்துழைப்புகளைப் பற்றி கலந்துரையாடவுள்ளார்.
மேலும், இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கிடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகள் தொடர்பாக, ஐக்கிய இராச்சிய வெளியுறவு செயலாளர் யுவெட் கூப்பரையும் பிரதமர் சந்திக்கவுள்ளார்.
அதற்கு மேலாக, 22ஆவது ஆண்டு காமன்வெல்த் கல்வி மாநாடு மற்றும் COL 2026 ஆளுநர் சபைக் கூட்டத்தின் ஓரமாக, காமன்வெல்த் பொதுச்செயலாளர் ஷிர்லி அயோர்கோர் போட்ச்வேயையும் பிரதமர் சந்திக்கவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் Institute of Development Studies நிறுவனத்தில் நடைபெறும் பொதுநிகழ்விலும், அந்த நிறுவனத்தின் 60ஆவது ஆண்டு விழாவிலும் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.
மேலும், ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் Oxford School of Global and Area Studies இல் நடைபெறும் அமர்வில் பிரதமர் உரையாற்றவுள்ளார். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுடன் கேள்வி-பதில் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
இந்த விஜயம் மூலம் கல்வி, ஆராய்ச்சி, கொள்கை கலந்துரையாடல் மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளில் இலங்கையின் சர்வதேச கல்வி நிறுவனங்கள், அபிவிருத்தி பங்காளிகள் மற்றும் காமன்வெல்த் நாடுகளுடனான உறவுகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.




