மருத்துவ பீட மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சில் விசேட கலந்துரையாடல்

மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டு குழுவினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவ பீட மாணவர் குழு நேற்று (18) கொழும்பில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, சுகாதார மற்றும் வெகுஜன ஊடகப் பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜயமுனி நேற்று பிற்பகல் மாணவர் குழுவின் பிரதிநிதிகளை சுகாதார அமைச்சகத்திற்கு அழைத்து கலந்துரையாடினார்.
இதன்போது பட்டப்படிப்பை முடித்த மருத்துவ மாணவர்களுக்கு உள்ளகப் பயிற்சி நியமனங்கள் வழங்குதல், புதிய நியமனங்கள், மற்றும் மருத்துவ சேவைகள் உள்ளிட்ட சுகாதார சேவைகளை விரிவுபடுத்துதல் தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், சுகாதாரத் துறையைச் சார்ந்த பல பிரச்சினைகள் குறித்து மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டு குழுவின் பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாகவும் அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளை தொடர்புடைய திணைக்களங்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவற்றுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மேலதிகமாக ஆராய்வதற்கும், அதிகாரிகள் மற்றும் துறைசார் நிறுவனங்களுடன் தொடர்ந்து கலந்துரையாடுவதற்கும் அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் மருத்துவ பீட மாணவர் குழுவின் பிரதிநிதிகள் மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) ஐ.ஜி.இ. ஜனக கிட்சிறி, மேலதிக செயலாளர் (மருத்துவ சேவைகள்) குமார விக்ரமசிங்க, பிரதி பணிப்பாளர் நாயகம் (மருத்துவ சேவைகள்) டாக்டர் எச்.எம். அர்ஜுன திலகரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




