EN
Local

17ஆவது தேசிய மாவீரர் நினைவு தினம் இன்று ஜனாதிபதி தலைமையில்

இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நீடித்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் 17ஆவது தேசிய மாவீரர் நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை (19) பத்தரமுல்லையில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபி வளாகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெறவுள்ளது.

நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு தேசிய மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் 19ஆம் திகதி தேசிய மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, இம்முறை 15ஆவது ஆண்டாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இதில் பல்வேறு விசேட அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படைகளுடன் இணைந்து பணியாற்றியபோது உயிரிழந்த தமிழ் மற்றும் முஸ்லிம் வீரர்களின் குடும்பத்தினருக்கும் இம்முறை விசேடமாக அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 30க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் குடும்பங்கள் விசேடமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் ஜனாதிபதியுடன் இணைந்து தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வாய்ப்பைப் பெறவுள்ளனர்.

மாவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதே இம்முறை நிகழ்வின் பிரதான நோக்கமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த ஆண்டுகளை விட அதிக எண்ணிக்கையிலான குடும்ப உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

மாலை 3 மணிக்கு நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளதுடன், விசேட அதிதிகள் மாலை 3.15 மணிக்குள் வருகை தரவுள்ளனர்.

தரைப்படை, கடற்படை, விமானப்படை, பொலிஸ், விசேட அதிரடிப்படை, சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் தேசிய மாணவர் படையணி ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட மொத்தம் 2,769 பேர் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும், சுமார் 160 மாவீரர் பெற்றோருக்கு இம்முறை பிரதான நிகழ்வில் நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வின் போது ஜனாதிபதி விசேட உரையாற்றவுள்ளதுடன், ஜனாதிபதி மற்றும் விசேட அதிதிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் தருணத்தில், உயிர்நீத்த வீரர்களின் பெற்றோரும் உறவினர்களும் இணைந்து அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button