சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பாய்வு தொடர்பான முக்கிய தீர்மானம்

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கை தொடர்பான ஐந்தாவது மற்றும் ஆறாவது நாணயக் கொள்கை மதிப்பாய்வுகளை எதிர்வரும் 27 ஆம் திகதி முன்னெடுப்பதற்கு அதன் நிர்வாகச் சபை தீர்மானித்துள்ளது.
இந்த மதிப்பாய்வுகளுக்கு நிர்வாகச் சபை ஒப்புதல் வழங்கிய பின்னர், இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அடுத்த கட்ட நிதியுதவியாக கிடைக்கும் வாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இதனை உறுதிப்படுத்தியதுடன், இலங்கையின் தற்போதைய பொருளாதார திட்ட முன்னேற்றம் இந்த நிதி விடுவிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் பணிப்பாளர் ஜூலி கொசாக் தெரிவித்த கருத்தில், இந்த மதிப்பாய்வுகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்கு சில முக்கிய நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அதில் குறிப்பாக, பாதிக்கப்படக்கூடிய சமூகப் பிரிவினரை பாதுகாப்பதுடன், செலவினத்தை ஈடுசெய்யக்கூடிய மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலை நிர்ணயக் கொள்கைகளை மீண்டும் நடைமுறைப்படுத்துவது அவசியம் என அவர் வலியுறுத்தியிருந்தார்.
இத்துடன், நிதி ஒழுங்கு, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் அரசியல் நிதி மேலாண்மை தொடர்பான முன்னேற்றங்களும் இந்த மதிப்பாய்வில் கவனிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




