தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் – எம்.பி. சிறிநாத்

இ. சிறிநாத், இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கு நீதி மற்றும் நியாயம் கிடைக்க வேண்டும் என சர்வதேச சமூகத்திடமும் இலங்கை அரசிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழின படுகொலை வாரமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காவது நாளான நேற்று (14) வியாழக்கிழமை, கொட்டும் மழையிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி பகுதியில் உள்ள சிவானந்தா தேசிய பாடசாலை முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வு கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேச லோகநாதன் குருக்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் இ. சிறிநாத் மற்றும் ஒன்றிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து ஈகச்சுடர்கள் ஏற்றப்பட்டதுடன், விசேட பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டன. அதன் பின்னர் முள்ளிவாய்க்கால் துயரத்தை நினைவுபடுத்தும் வகையில் கஞ்சி வழங்கப்பட்டது. கடும் மழை பெய்தபோதிலும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
அங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இ. சிறிநாத், தமிழ் மக்கள் இனஅழிப்புக்கும் படுகொலைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட நாளை நினைவுகூரவும், உயிரிழந்தவர்களின் ஆன்ம சாந்திக்காகவும் இந்த நிகழ்வு நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
மேலும், இறுதிக்கட்ட போரின்போது தமிழ் மக்கள் திட்டமிட்ட வகையில் கொல்லப்பட்டதாகவும், கொத்தணி குண்டுகள் மூலம் மக்கள் பெருமளவில் உயிரிழந்ததாகவும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் கூறினார்.
அதோடு, உயிரிழந்தவர்களுக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அரசுக்கும் இந்த பிரச்சினை தொடர்ந்து நினைவூட்டப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழர் தேசிய உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் தங்களது உயிர்களை அர்ப்பணித்தவர்களை நினைவுகூர்வதற்கும் இந்த நிகழ்வுகள் முக்கியமானவை என அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் உணர்வுபூர்வமாக இத்தகைய நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருவதாகவும், தமிழ் மக்கள் எதிர்கொண்ட துயரங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் அவை நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் மற்றும் அக்கரைப்பற்று இந்துக்குருமார் ஒன்றியத்தினருக்கு நன்றியை தெரிவித்த அவர், சமயப் பணிகளைத் தாண்டி தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்காக அவர்கள் ஆற்றும் சேவையை பாராட்டினார்.
அவர்களின் தன்னார்வ பணிகளுக்கு தொடர்ந்து தனது ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்குவேன் என்றும், தமிழ் மக்களுக்கு நீதி மற்றும் நியாயம் கிடைக்க வேண்டும் என மீண்டும் சர்வதேச சமூகத்திடமும் அரசாங்கத்திடமும் கோரிக்கை விடுத்தார்.




