EN
Local

யாழ் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் முகாமைத்துவ பணிகளுக்கு ‘நம்பிக்கை பொறுப்பு நிதியம்’

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலைய முகாமைத்துவத்திற்காக நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்காக “நம்பிக்கைப் பொறுப்பு நிதியமொன்றை” அமைக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணத்தின் கலாச்சார மரபுகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், இலங்கை மற்றும் இந்தியா இடையிலான கலாச்சார ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்திய அரசின் நிதியுதவியுடன் 11 மாடிகளைக் கொண்ட திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையில், இந்த மத்திய நிலையத்தை பராமரித்து நிர்வகிப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது. அதன் கீழ், மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பாக தீர்மானங்களை எடுக்க ஒருங்கிணைந்த முகாமைத்துவக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின் படி, கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பின்னர் இந்த கலாச்சார மத்திய நிலையம் இலங்கை அரசாங்கத்தின் மூலம் யாழ் மாநகர சபைக்கு ஒப்படைக்கப்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து, மத்திய நிலையத்தின் நிர்வாக மற்றும் முகாமைத்துவப் பணிகளை மேற்கொள்வதற்காக நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் ஒன்றை அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள நம்பிக்கைப் பொறுப்புறுதி வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதலும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles

Back to top button