அரசியல் பழிவாங்கலுக்காகவே எம்மீது குற்றச்சாட்டுகள் – நாமல் ராஜபக்ஷ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, தங்கள்மீது முன்வைக்கப்பட்டுள்ள பல குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கத்துடனும் பழிவாங்கும் நோக்கத்துடனும் முன்வைக்கப்பட்டவை என தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பிற்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டபோது, பெருமளவிலான ஆதரவாளர்கள் அங்கு கூடியிருந்ததாகவும், அந்த ஆதரவாளர்களை பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்து அழைத்ததாக ஆளும் தரப்பினர் குற்றஞ்சாட்டுவதாகவும் கூறினார்.
ஆனால், கட்சியின் ஆதரவாளர்களை தாங்கள் அழைக்கவில்லை என்றும், அவர்கள் தாமாகவே வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தங்களது அரசியல் பலத்தை அறிய விரும்பினால், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் உடனடியாக நடத்த வேண்டும் என்றும், அப்போது பொதுஜன பெரமுன தனது ஆதரவை நிரூபிக்கும் என்றும் நாமல் ராஜபக்ஷ கூறினார்.
மேலும், அரசியல் நோக்கங்களையும் பழிவாங்கலையும் இலக்காகக் கொண்டு தங்கள்மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், முறையான மற்றும் நியாயமான விசாரணைகள் இடம்பெற்றால் தாங்கள் விடுதலையாவோம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் விசாரணைகள் உண்மையில் சுயாதீனமாக நடைபெறுமா என்பது சந்தேகத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.
நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பே, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒரு அரசியல் கூட்டத்தில் வழக்கின் தீர்ப்பை முன்கூட்டியே குறிப்பிட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
அது நீதித்துறைக்கு விடுக்கப்படும் பெரிய அச்சுறுத்தலாகும் என்றும் அவர் கூறினார்.
மேலும், கடந்த அரசாங்கங்கள் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுத்ததாக விமர்சித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய ஜனாதிபதி, அதே தவறுகளை மீண்டும் செய்யக் கூடாது என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.




