EN
Local

சபாநாயகர் – பிரான்ஸ் செனட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே சந்திப்பு

பிரான்ஸின் செனட் சபையில் உள்ள பிரான்ஸ்-இலங்கை நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்களைக் கொண்ட தூதுக் குழுவினர் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இலங்கைக்கும் பிரான்ஸிற்கும் இடையில் காணப்படும் நீண்டகால இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இச்சந்திப்பு அமைந்தது.

இந்தத் தூதுக் குழுவில் பிரான்ஸ் – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவர் வலினா பௌலி ககன் (Ms. Vanina Paoli-Gagin), குறித்த சங்கத்தின் பிரதித் தலைவர் டிடியர் மெரி (Mr. Didier Marie), செனட்டர் லோரன்ஸ் முலர் ப்ரோன் (Ms. Laurence Muller-Bronn) ஆகியோருடன், பல்வேறு அதிகாரிகளும் உள்ளடங்கியிருந்தனர்.

தூதுக்குழுவினரை வரவேற்ற சபாநாயகர், கடந்த எழுபது ஆண்டுகளாக பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட விழுமியங்களின் அடிப்படையில் இலங்கைக்கும் பிரான்ஸிற்கும் இடையில் நீடித்துவரும் இருதரப்பு உறவுகளை நினைவுகூர்ந்தார். பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்துவதிலும், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் நாடாளுமன்ற இராஜதந்திரத்தின் வகிபாகத்தை அவர் வலியுறுத்தினார்.

டிட்வா புயல் தாக்கத்திற்குப் பின்னர் பிரான்ஸ் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்ட சபாநாயகர், புயலுக்குப் பிந்தைய சூழ்நிலையையும், தற்போதைய மத்திய கிழக்கு நெருக்கடியால் எழும் சவால்களையும் அரசாங்கம் வெற்றிகரமாகக் கையாண்டிருப்பதையும் இங்கு சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ரீதியான உறவுகளை எடுத்துரைத்த சபாநாயகர், இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு பிரான்ஸ் முக்கிய சந்தையாகத் தொடர்ந்தும் காணப்படுவதாகக் குறிப்பிட்டார். தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் மற்றும் முறைப்பாடுகளைக் காண்காணிப்பதற்கான வலுவான திட்டங்கள் மூலம் வசதிவாய்ப்புக்களை அதிகரிக்கும் அதேநேரம், சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பை இலங்கை தொடர்ந்தும் உறுதிசெய்து வருவதாக அவர் தெரிவித்தார். எயார் பிரான்ஸ் நிறுவனத்துடனான தொடர்புகளை மேம்படுத்தி இரு நாடுகளுக்கும் இடையில் வான் வழியான இணைப்பை விரிவுபடுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியமும் இங்கு அடையாளம் காணப்பட்டது.

GSP+ சலுகை மூலம் இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்பை பாராட்டிய சபாநாயகர், மேம்பட்ட ஒத்துழைப்பு மற்றும் நிலையான வர்த்தக வாய்ப்புகள் மூலம் இலங்கையின் தொழில்துறைகளை மேலும் வலுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சபாநாயகர் வலியுறுத்தினார்.

இரு நாடுகளுக்கும் அதிகரித்துவரும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளான கடல்சார் பாதுகாப்பு மற்றும் நீலப் பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்தும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

Related Articles

Back to top button