EN
Local

நான்கு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு; கணவர் மீது சந்தேகம்

மொனராகலை மாவட்டத்தின் பிபில, கொடிகமுவ முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான ரினோஷா உம்மா தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கிடைத்த தகவல்களின்படி, சம்பவத்தன்று இரவு குடும்பத்தினருடன் உணவருந்திய பின்னர் அவர் தனது கணவருடன் அறையில் உறங்கச் சென்றுள்ளார். பிள்ளைகள் வேறு அறையில் உறங்கிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகாலை நேரத்தில் அறையில் தீப்பிழம்புகள் காணப்பட்டதை அடுத்து பிள்ளைகள் அங்கு சென்று பார்த்தபோது, தாயார் தீக்காயங்களுக்கு உள்ளாகியிருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்டு பிபில ஆதார மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பெட்ரோல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் அவரது கணவர் தற்போது பிரதேசத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அவரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணவர் கோழி இறைச்சி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர் எனவும், தம்பதியினருக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவத்தின் உண்மை நிலை மற்றும் காரணங்களை உறுதிப்படுத்தும் நோக்கில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Back to top button