EN
International

மனித உரிமை கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மைக்ரோசொப்ட்

பாலஸ்தீனியர்களைக் கூட்டுப் பெருந்திரள் கண்காணிப்பதற்காக தனது கிளவுட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, Microsoft நிறுவனம் மனித உரிமை தொடர்பான கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குவதாக அறிவித்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவத்தின் உளவுப் பிரிவான யுனிட் 8200 (Unit 8200), பாலஸ்தீனியர்களின் மில்லியன் கணக்கான தொலைபேசி அழைப்புகளைச் சேகரித்து பகுப்பாய்வு செய்வதற்காக மைக்ரோசொப்ட்டின் Azure கிளவுட் தளத்தைப் பயன்படுத்தியதாக கடந்த ஆண்டு The Guardian செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து, மைக்ரோசொப்ட் நிறுவனம் இந்த விவகாரம் தொடர்பில் விசேட விசாரணையை ஆரம்பித்தது.

முதற்கட்ட விசாரணையில், இஸ்ரேலிய உளவுப் பிரிவு நிறுவனத்தின் சேவை விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளை மீறியுள்ளதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேலிய இராணுவத்திற்கான கிளவுட் மற்றும் செயற்கை நுண்ணறிவு சேவைகளை மைக்ரோசொப்ட் ஏற்கனவே நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (04) நிறைவடைந்த இறுதி விசாரணை அறிக்கையின் அடிப்படையில், நிறுவனம் பல புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

அதன்படி, வெளிநாட்டு அரசாங்கங்களுக்கான பாதுகாப்பு அனுமதி பெற்ற ஊழியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் முறைமைகள் மேம்படுத்தப்படவுள்ளன. மேலும், போர் மற்றும் மோதல்கள் நிலவும் உயர் ஆபத்துப் பகுதிகளில் மனித உரிமை தணிக்கைகள் வலுப்படுத்தப்படுவதுடன், தேசிய பாதுகாப்பு தொடர்பான புதிய வணிக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன் கடுமையான சரிபார்ப்பு நடைமுறைகளும் அமுல்படுத்தப்படவுள்ளன.

இதேவேளை, நிறுவனத்தின் இஸ்ரேல் கிளையில் பணியாற்றிய சில ஊழியர்கள், நிறுவன விதிமுறைகளை மீறி இஸ்ரேலிய இராணுவத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் மைக்ரோசொப்ட் இஸ்ரேல் நிறுவனத்தின் தலைமை அதிகாரி மற்றும் பல மூத்த நிர்வாகிகள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து விளக்கமளித்த மைக்ரோசொப்ட், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Satya Nadella உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகிகளுக்கு இந்த உளவுத் திட்டம் தொடர்பான தகவல்கள் முன்னதாக தெரியவில்லை என தெரிவித்துள்ளது.

அதேவேளை, “பொதுமக்களைக் கண்காணிக்கும் எந்தவொரு தொழில்நுட்பத்தையும் மைக்ரோசொப்ட் வழங்காது” என்ற நிறுவனத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில் இந்த புதிய மனித உரிமை கொள்கைகள் அமுல்படுத்தப்படுவதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button