சீமானுக்கு எதிரான அர்ச்சுனாவின் கருத்துக்கு ராமதாஸ் கண்டனம்

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமிழ்நாட்டின் “நாம் தமிழர்” கட்சித் தலைவர் சீமானுக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அர்ச்சுனா சீமானிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய அர்ச்சுனா, “நாம் தமிழர்” கட்சித் தலைவர் சீமானை கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத் தமிழர்கள் தங்களது அரசியல் மற்றும் வாழ்வுரிமைக்காக 75 ஆண்டுகளுக்கும் மேலாகப் பெரிய தியாகங்களுடன் போராடி வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழினம் கடந்த காலங்களில் பின்னடைவை சந்தித்ததற்கு சகோதர யுத்தங்களும் ஒற்றுமையின்மையும் முக்கிய காரணமாக இருந்ததாக வரலாறு உணர்த்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சூழலில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, “ஆயுதம் இருந்திருந்தால் சுட்டிருப்பேன்” என்று சீமானை குறிவைத்து பேசியிருப்பது ஜனநாயக மரபுகளுக்கு முற்றிலும் முரணானது என்றும் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய அரசியல் வளர்வதைத் தடுக்க முயலும் சக்திகளின் ஏவலாளியாக செயல்பட்டு, தமிழர் ஒற்றுமையை சீர்குலைக்கும் அரசியலை தமிழினம் ஒருபோதும் ஏற்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அண்டை நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதைக் சம்பந்தப்பட்ட அரசுகள் கண்டுகொள்ளாமல் இருப்பதும் கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார்.
எனவே, ராமநாதன் அர்ச்சுனா தனது ஜனநாயக விரோதமான கருத்துக்களை உடனடியாகத் திரும்பப் பெற்று, சீமானிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.




