EN
International

டிரம்ப் ஆதரவு வேட்பாளருக்கு எதிராக போராடும் குடியரசுக் கட்சி செனட்டர் பில் காசிடி

அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் நடைபெறும் குடியரசுக் கட்சியின் முக்கியமான ஆரம்பத் தேர்தலில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஆதரவை எதிர்கொண்டு அரசியல் நிலைப்பாட்டை பாதுகாக்கும் போராட்டத்தில் செனட்டர் பில் காசிடி ஈடுபட்டுள்ளார்.

2021ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க காப்பிடல் கட்டிடத் தாக்குதலுக்குப் பின்னர் டிரம்புக்கு எதிரான பதவி நீக்க விசாரணையில் அவரை குற்றவாளி எனத் தீர்ப்பளிக்க வாக்களித்த ஏழு குடியரசுக் கட்சி செனட்டர்களில் ஒருவராக பில் காசிடி இருந்தார்.

இந்த பின்னணியில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் லூசியானா மாநில காங்கிரஸ் உறுப்பினரான ஜூலியா லெட்லோவுக்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். காசிடியை “விசுவாசமற்ற பேரழிவு” எனக் குறிப்பிட்ட டிரம்ப், வாக்காளர்களை லெட்லோவுக்கு ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போதைய கருத்துக்கணிப்புகளின்படி, பில் காசிடி, ஜூலியா லெட்லோ மற்றும் டிரம்ப் ஆதரவு பெற்றுள்ள மற்றொரு வேட்பாளரான மாநில பொருளாளர் ஜான் பிளெமிங்கிற்கு பின்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தேர்தல், டிரம்புக்கு எதிராகச் செயல்பட்ட குடியரசுக் கட்சியினரை அரசியல் ரீதியாக தண்டிக்கும் அவரது செல்வாக்கை மீண்டும் சோதிக்கும் முக்கியமான தேர்தலாகக் கருதப்படுகிறது.

எந்த வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறத் தவறினால், முதல் இரண்டு இடங்களைப் பெறும் வேட்பாளர்கள் ஜூன் மாத இறுதியில் நடைபெறும் இரண்டாவது சுற்றுத் தேர்தலுக்கு முன்னேறுவர்.

68 வயதான பில் காசிடி, தனது மீள் தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்புடன் ஏற்பட்டிருந்த உறவை மீண்டும் சரிசெய்ய முயன்றுள்ளார்.

“ஜனாதிபதி டிரம்ப் என்னை அதிகமாக விரும்புவதாக நான் நினைக்கவில்லை. ஆனால் நாங்கள் இணைந்து நன்றாக வேலை செய்கிறோம்,” என்று அவர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், தாம் ஆதரித்த பல சட்டமூலங்கள் பின்னர் டிரம்பால் சட்டமாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், காசிடியின் இந்த முயற்சிகளை பொருட்படுத்தாமல், ஜனவரி மாதத்திலேயே ஜூலியா லெட்லோவை போட்டியிடுமாறு டிரம்ப் ஊக்குவித்திருந்தார்.

இன்று தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பமான நிலையில், டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் மீண்டும் காசிடியை கடுமையாக விமர்சித்தார்.

“பில் காசிடி மிகவும் மோசமானவர். லூசியானாவுக்கு தீங்கு விளைவிப்பவர். இன்று நடைபெறும் தேர்தலில் அவர் மோசமாக தோல்வியடைவார்,” என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

45 வயதான ஜூலியா லெட்லோ, 2021ஆம் ஆண்டு லூசியானாவிலிருந்து அமெரிக்க காங்கிரஸுக்கு தெரிவான முதல் குடியரசுக் கட்சி பெண் உறுப்பினராக வரலாறு படைத்தார்.

அவரது கணவர் லூக் லெட்லோ, 2020ஆம் ஆண்டு காங்கிரஸ் உறுப்பினராகத் தெரிவாகிய பின்னர் கொரோனா தொடர்பான சிக்கல்களால் பதவியேற்புக்கு முன்பே உயிரிழந்த நிலையில், நடைபெற்ற விசேட தேர்தலில் ஜூலியா லெட்லோ வெற்றி பெற்றார்.

பில் காசிடி குடியரசுக் கட்சிக்கு விசுவாசமாக இல்லை என்றும், “அழுத்தம் வரும் நேரத்தில் எங்கள் செனட்டர் எப்படிப் வாக்களிப்பார் என்று லூசியானா மக்கள் சந்தேகப்பட வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது” என்றும் லெட்லோ குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், டிரம்புக்கு எதிராக காசிடி அளித்த வாக்கு துரோகம் எனக் கருதும் MAGA ஆதரவாளர்களின் கருத்தையும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

குடலியல் நிபுணரான பில் காசிடி, தடுப்பூசிகளுக்கான தனது வெளிப்படையான ஆதரவினாலும் வலதுசாரி குழுக்களிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.

மறுபுறம், ஜூலியா லெட்லோ போதுமான அளவு பழமைவாத கொள்கைகளை பின்பற்றவில்லை எனக் கூறியுள்ள காசிடி, 2020ஆம் ஆண்டு கல்வியில் பல்வகைமை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்தை (DEI) ஆதரித்து அவர் வெளியிட்ட கருத்துக்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

லூசியானா மாநிலத்தின் இந்தத் தேர்தல், டிரம்பின் குடியரசுக் கட்சியிலான தொடர்ந்த செல்வாக்கையும், அவருக்கு எதிராக செயல்பட்ட தலைவர்களின் அரசியல் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் முக்கியமான போட்டியாகப் பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button