உலக சுகாதார அமைப்பு (WHO) எபோலா பரவலை சர்வதேச அவசரநிலையாக அறிவித்தது

கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றை, உலக சுகாதார நிறுவனம் (World Health Organization) இன்று ஞாயிற்றுக்கிழமை “சர்வதேச கவலைக்குரிய பொதுச் சுகாதார அவசரநிலை” (PHEIC) என உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த பரவல் “புந்திபுகியோ (Bundibugyo)” எனப்படும் குறிப்பிட்ட எபோலா வைரஸ் வகையால் ஏற்படுகிறது.
பொதுவாக காணப்படும் எபோலா-சையர் (Ebola-Zaire) வகைக்கு தடுப்பூசிகள் உள்ளன. ஆனால் தற்போதைய புந்திபுகியோ வகைக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது குறிப்பிட்ட மருந்துகளோ இல்லை என்பதால் நிலைமை மிகவும் தீவிரமானதாக கருதப்படுகிறது.
இது இதுவரை உலகளாவிய பெருந்தொற்றாக மாறவில்லை என்றாலும், கொங்கோவுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் நாடுகள் மிக உயர்ந்த ஆபத்தில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை வரை கிடைத்த தரவுகளின்படி, கொங்கோவின் இட்டூரி மாகாணத்தில் உள்ள புனியா, ரம்பாரா மற்றும் மொங்வாலு ஆகிய மூன்று சுகாதார வலயங்களில் 246 சந்தேக நோயாளிகளும், 80 சந்தேக மரணங்களும் பதிவாகியுள்ளன.
ஆரம்ப பரிசோதனைகளில் அதிகளவில் தொற்று உறுதி செய்யப்படுவதால், உண்மையான பாதிப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும், இந்த வைரஸ் சர்வதேச எல்லைகளைத் தாண்டி பரவத் தொடங்கியுள்ளதாகவும் WHO தெரிவித்துள்ளது.
கொங்கோவிலிருந்து உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவிற்கு சென்ற இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதேபோல், இட்டூரி மாகாணத்திலிருந்து கொங்கோ தலைநகர் கின்ஷாசாவிற்கு சென்ற ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 21 நாட்கள் சர்வதேச பயணங்களை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்து நாடுகளும் அவசர சுகாதார எதிர்வினை அமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்கவும், எல்லைகள் மற்றும் முக்கிய உள்நாட்டு பாதைகளில் பரிசோதனைகளை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், நாடுகள் எல்லைகளை மூடவோ அல்லது கடுமையான வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதிக்கவோ வேண்டாம் என WHO வலியுறுத்தியுள்ளது. அவ்வாறு செய்தால் மக்கள் சட்டவிரோத வழிகளை பயன்படுத்தக்கூடும் என்றும், அது கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பாதிக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.




