EN
Local

நவகம்புராவில் வீடற்ற குடும்பத்திற்கான புதிய வீட்டு திட்டம் ஆரம்பம்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கொழும்பு வடக்கு நகர அலுவலகத்தின் ஏற்பாட்டில், வீடற்ற மற்றும் வறிய நிலையில் வாழும் மக்களுக்கு நிலையான வீடுகளை அமைத்துக் கொடுக்கும் புதிய வீட்டு திட்டம் இன்று (18) கொழும்பு வடக்கு நவகம்புர பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் நேரடி அனுசரணையுடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய வீடமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன் கீழ், கொழும்பு வடக்கு நவகம்புர பகுதியில் மிகவும் அபாயகரமான நிலையில் வசித்து வந்த முருகையா மாதவன் என்பவரது குடும்பத்திற்காக புதிய வீடொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று சுப நேரத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு இந்து மத மரபின்படி பூமி பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டதுடன், கொட்டாஞ்சேனை வரதராஜ விநாயகர் ஆலய பிரதம குரு எஸ். ரவிச்சந்திர குருக்கள் பூஜை நிகழ்வுகளை நடத்தி வைத்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கொழும்பு வடக்கு நகர அலுவலக சிரேஷ்ட முகாமையாளர் ஆர்.எம். சுபசிங்க, முருகையா மாதவனின் பழைய வீடு மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும், அண்மையில் பெய்த கடும் மழையால் அந்த குடும்பம் பெரும் அபாயத்தில் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்தார்.

அதனால் அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் தொழில்நுட்ப அதிகாரிகள் மேற்கொண்ட கள ஆய்வுக்குப் பின்னர் உடனடியாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த திட்டத்தின் கீழ் தேவையுடைய குடும்பங்களுக்கு நிலையான வீடுகளை அமைப்பதற்காக அரசாங்கம் 10 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குகிறது. அதன்படி முருகையா மாதவனின் வீட்டை புதுப்பித்து புதிய வீடாக அமைப்பதற்காக 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஏ.பி. செல்வம், பிரதேச செயலாளர் அலுவலக அதிகாரிகள், அபிவிருத்தி அதிகாரிகள், சமயத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, இது முருகையா மாதவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் வாழ்க்கையில் மறக்க முடியாத வரலாற்று சிறப்புமிக்க நாள் என குறிப்பிட்டார். புதிய வீடு விரைவில் நிர்மாணிக்கப்பட்டு குடும்பத்தினர் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் எனவும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் ஏ.பி. செல்வம், குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இதுபோன்ற நலத்திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும், புதிய வீடு அடுத்த ஆறு மாதங்களுக்குள் முழுமையாக கட்டி முடித்து பயனாளிக்கு கையளிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளும் இந்த வீட்டின் கட்டுமானப் பணிகளை விரைவாக நிறைவு செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button