ஐந்து ஆண்டுகளில் தாதியர் சேவைக்கு 13,600 பேர் புதிதாக நியமனம்: இந்த ஆண்டுக்குள் 50% இலக்கு பூர்த்தி – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

தற்போதைய அரசாங்கத்தின் 2025 முதல் 2029 வரையிலான முதல் ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் தாதியர் சேவைக்கு புதிதாக 13,600 பேரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதுவரை வழங்கப்பட்ட நியமனங்களின் மூலம் மொத்த இலக்கில் 30 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 2026 ஒக்டோபர் மாதத்தில் 2,867 தாதியர் நியமனங்கள் வழங்கப்படுவதன் மூலம் 50 சதவீத இலக்கு எட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் இலவச சுகாதார சேவையின் மனிதவளத் தரத்தையும் செயல்திறனையும் மேம்படுத்தும் நோக்கில், 515 அறிவியல் இளங்கலை (BSc) தாதியர் பட்டதாரிகளுக்கு தாதியர் உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு 2026 மே 29 ஆம் திகதி கொழும்பு 07 இல் அமைந்துள்ள இலங்கை அறக்கட்டளை நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.
நியமனம் பெற்றுள்ள இந்த தாதியர் உத்தியோகத்தர்கள், அரச பல்கலைக்கழகங்களில் தாதியர் கௌரவப் பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்ததுடன், இலங்கை தாதியர் சேவை அரசியலமைப்பிற்கு அமைவாக நாடு முழுவதும் உள்ள 31 அரச வைத்தியசாலைகளில் ஆறு மாத ஆலோசனையூட்டல் மற்றும் ஒருங்கிணைப்புப் பயிற்சியையும் நிறைவு செய்துள்ளனர்.
தேசிய வைத்தியசாலைகள், போதனா வைத்தியசாலைகள் மற்றும் மாவட்ட பொது வைத்தியசாலைகளில் காணப்படும் வெற்றிடங்கள் மற்றும் சேவைத் தேவைகளை கருத்தில் கொண்டு இவர்களை பணியில் அமர்த்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
நியமனங்களின் முன்னேற்றம்
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:
- கடந்த ஆண்டு தாதியர் கல்லூரிகளில் பயிற்சியை முடித்த 3,441 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.
- இது அண்மைக்காலத்தில் ஒரே தடவையில் தாதியர் சேவையில் இணைக்கப்பட்ட மிகப்பெரிய குழுவாகும்.
- தற்போது நியமனம் பெற்ற 515 பேரையும் சேர்த்து, கடந்த ஓராண்டில் 3,956 பேர் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.
- எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் மேலும் 2,867 பேர் தாதியர் சேவையில் இணைக்கப்படவுள்ளனர்.
- இதன்மூலம் 2025 மற்றும் 2026 ஆண்டுகளில் மட்டும் 6,823 பேர் புதிதாக தாதியர் சேவையில் இணைக்கப்படுவர்.
மேலும்:
- 2028 ஆம் ஆண்டில் 1,949 பேர் கொண்ட மற்றொரு குழுவும்,
- 2029 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 2,920 பேர் கொண்ட குழுவும் நியமனங்களைப் பெறவுள்ளனர்.
தாதியர் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து பட்டதாரிகளை தொடர்ச்சியாக உள்வாங்கி, தேவையான இலக்குகளை அடைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தாதியர் சேவையின் முக்கியத்துவம்
நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க, இலங்கையில் தாதியர் சேவை என்பது உயர்ந்த ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் கொண்ட ஒரு முக்கியமான தொழில்முறை சேவையாக பல தசாப்தங்களாக திகழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
அறிவியல் இளங்கலை தாதியர் பட்டதாரிகள் கடைசியாக 2021 ஆம் ஆண்டில் மூன்றாம் தர தாதியர் பதவிகளுக்காக உள்வாங்கப்பட்டிருந்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர்கள், சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம், வைத்தியசாலைப் பணிப்பாளர்கள், தாதியர் கல்லூரிகளின் அதிபர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.




