கைது செய்யப்பட்டவருக்கு நியாயமான விசாரணை அவசியம் – நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்

கைது செய்யப்பட்டவர் சட்டத்தின் அடிப்படையில் நியாயமான விசாரணையைப் பெற்று, சட்டத்தின் ஊடாகவே விடுதலையாக வேண்டும் என்பதே தமது நிலைப்பாடும் இலக்குமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
அவர் இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பதிவில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இளைஞர் பாடகர் கைது குறித்து கருத்து
அந்த பதிவில் மேலும் அவர் தெரிவித்ததாவது, தோல்வியடைந்த சில அரசியல்வாதிகளுக்கு இன்றைய அரசியல் சூழலில் ஒரு இளைஞர் பாடகர் கைது செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் தமக்கு அது மகிழ்ச்சியல்ல, மனவேதனையே என கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட பின்னரே அந்த இளைஞர் கலைஞர் குறித்து பலரும் பேசத் தொடங்கியுள்ளதாகவும், இதுவரை அவரது திறமை மற்றும் படைப்புகள் கவனிக்கப்படாத நிலையில், தற்போது அவை பேசுபொருளாகி இருப்பது ஒரு வகையில் ஆறுதலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கலைஞர்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட திருத்தம்
இசை என்பது மக்களின் உணர்வுகளையும் அனுபவங்களையும் வெளிப்படுத்தும் ஒரு கலை வடிவமாகும் எனக் குறிப்பிட்ட இளங்குமரன், கலைஞர்கள் தங்களது படைப்புகளை வெளிப்படுத்தும் போது அவர்கள் பாதிக்கப்படாத வகையில் எதிர்காலத்தில் சட்டங்களில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பல திறமையான பாடகர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் உள்ளபோதிலும், அவர்களின் திறமைக்கு ஏற்ப உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
திறமைக்கு உரிய அங்கீகாரம் தேவை
சில சந்தர்ப்பங்களில் கலைஞர்களின் படைப்புகள் பிறரால் பயன்படுத்தப்பட்டு பொருளாதார பலன்கள் பெறப்படுவதாகவும், ஆனால் உண்மையான திறமையாளர்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைதுக்குப் பிறகே பலர் அந்த இளைஞர் பாடகரின் திறமையை கவனிக்கத் தொடங்கியிருப்பது குறித்து அவர் சுட்டிக்காட்டினார்.
அவரது பாடல்களை முன்பே எத்தனை பேர் கவனமாகக் கேட்டார்கள், அவரது திறமையை எவ்வளவு பேர் மதித்தார்கள் என்பதையும் சமூகம் சிந்திக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.




