முள்ளிவாய்க்கால் தொடர்பாக பன்னாட்டு நீதி கோரி ரவிகரன் பாராளுமன்றத்தில் அஞ்சலி
கொழும்பு | அரசியல் செய்தி

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை இடம்பெற்று 17 ஆண்டுகள் கடந்தும் இதுவரை நீதி கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பன்னாட்டு அளவில் நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
புதன்கிழமை (06) பாராளுமன்றத்தில் நடைபெற்ற மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், இறுதிக்கட்டப் போரின் போது இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பின்னரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சட்டமூல விவாதத்திற்கு முன்பாகவே, நீதி காத்திருக்கும் ஒரு இனத்தின் குரலாக சில கருத்துகளை முன்வைக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார். 17 ஆண்டுகளுக்கு முன்பு, பல நாடுகளின் ஆதரவுடன் ஆயுதப்போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாகவும், இறுதிக்கட்டத்தில் மனிதாபிமான நெறிமுறைகள் மீறப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததையும், பலர் இன்னமும் காணாமல் போனவர்களாகவே உள்ளதையும் சுட்டிக்காட்டிய அவர், அரசின் மீதான நம்பிக்கையுடன் ஒப்படைக்கப்பட்டவர்களை குடும்பங்கள் இன்னமும் தேடி அலைகின்றன என்றார்.
நீதி வழங்கப்படாத சூழலில் நல்லிணக்கம் எவ்வாறு சாத்தியம் எனக் கேள்வி எழுப்பிய அவர், மே 18ஆம் தேதி மேலும் ஒரு ஆண்டாக நீதியின்றி கடந்து செல்லும் நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இறுதியாக, போரில் உயிரிழந்த பொதுமக்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாராளுமன்றத்தில் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்திய அவர், கடந்த காலங்களைப் போல இன்றும் பன்னாட்டு சமூகத்திடம் நீதி கோருவதாகத் தெரிவித்தார்.




