மின் கட்டணத்தை குறைக்க உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் – வலுசக்தி பிரதி அமைச்சர்

இலங்கையின் மின்சக்தி மாற்றத்தை வெறும் மின்கல (Battery) சேமிப்பு தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி முன்னெடுக்க முடியாது என்றும், சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை விரிவுபடுத்துவதுடன் தேசிய மின் கட்டமைப்பிலும் பெரியளவிலான மறுசீரமைப்புகள் அவசியம் என்றும் வலுசக்தி பிரதி அமைச்சர் இல்யாஸ் அர்காம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:
“மின்கலங்கள் என்பது மின்சாரத்தை சேமித்து வைக்கும் ஒரு ஊடகம் மட்டுமே. நாட்டிற்கு கூடுதல் சூரியசக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் தேவைப்படுகின்றன.
தற்போது சுமார் 300 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மன்னாரில் காற்றாலை திட்டங்களுக்கான உபகரணங்கள் வந்தடைந்துள்ளன. இதன் கீழ் மன்னாரில் 50 மெகாவாட் திட்டமும், முள்ளிக்குளத்தில் தலா 50 மெகாவாட் வீதம் இரண்டு திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு மொத்தமாக 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது.
மேலும், நீர்நிலைகளில் மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி அமைப்புகளை உருவாக்குவதற்கான ஆய்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கூரை மற்றும் தரைவழி சூரியசக்தி திட்டங்கள் மூலம் 200 முதல் 250 மெகாவாட் வரையிலான மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், Asian Development Bank உடன் இணைந்து 150 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்திற்கான முத்தரப்பு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த அனைத்து திட்டங்களின் ஊடாகவும் அடுத்த 18 மாதங்களுக்குள் சுமார் 300 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் இணைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இருப்பினும், மின் உற்பத்தித் திறன் அதிகரிப்பது மட்டுமே போதுமானதல்ல. உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேவையான இடங்களுக்கு கொண்டு செல்லும் தற்போதைய மின் விநியோகக் கட்டமைப்பில் பாரிய சவால்கள் காணப்படுகின்றன.
மின்சாரத்தை உற்பத்தி செய்தாலும் அதை விநியோகிக்க முடியாவிட்டால் அதனால் பயன் இல்லை. எனவே புதிய மின் பரிமாற்றக் கோபுரங்கள் மற்றும் விநியோக இணைப்புகளை அமைப்பது அவசியமாகும்.
மின்சாரத் துறையின் மொத்தச் செலவில் சுமார் 80 சதவீதம் உற்பத்திச் செலவாகவே காணப்படுகிறது. எனவே மின் உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலமே நுகர்வோருக்கான மின் கட்டணத்தை கணிசமாகக் குறைக்க முடியும்” என்றார்.




